பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்321

"தீட்டிக் காட்டிய திவ்விய நூல், புற
நாட்டில் கற்றது எனா, நரர் பல் கதை
பூட்டி, போற்று அரு நூல் என, பொற்பு அறம்
கோட்டி, கோது உலகு ஆர்ந்தன கொள்கையே.

     "ஆண்டவனே தீட்டிக் காட்டிய தேவ நூலை, அது புற நாட்டில்
கற்று வழங்கியதெனப் புறக்கணித்து, மானிடம் பல கதைகளை இணைத்து,
போற்றத்தக்க அரிய வேத நூல் அதுவென்று கொண்டு, நல்லறத்தைக்
கோணச் செய்தமையால், குற்றமுள்ள கொள்கைகள் உலகெங்கும்
நிறைந்தன.

     "இது வேதம் உட்கொள்ளாத பாவத்தின்மை காட்டற்கு உரைத்தது
என்க" என்பது பழையவுரை அடிக்குறிப்பு.

           50
நஞ்சி தேயமு திஃதென நாடுதற்
கஞ்சி யேநரர் தேறில ராதலா
னெஞ்சி லேயரு ணேரிய வெந்தை நீ
யெஞ்சி யேமறை காட்டிட வெய்தினாய்.
 
"நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு
அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால்
நெஞ்சிலே அருள் நேரிய எந்தை நீ
எஞ்சியே மறை காட்டிட எய்தினாய்.

     "அக்கொள்கைகளுள், நஞ்சு இது அமுது இதுவெனத் தேடிக்
காண்பதற்கும் மனிதர் அஞ்சித் தெளிவடையாராதலினால், நெஞ்சிலே
கருணை பொருந்திய எம் தந்தையாகிய நீயே மெலிந்த தன்மையாய்
உண்மை வேதத்தைக் காட்டுமாறு மனிதனாய் வந்து தோன்றினாய்.

     இங்குத் தேடிக் காண அச்சமாவது, தேடின் தன் சமயம்
பொய்யாகி விடுமோ என்ற அச்சமும், அதனை விட்டு உண்மையைத்
தழுவினால் முன்னைய தெய்வத்தின் சீற்றத்திற்கு ஆளாகிவிடுவோமோ
என்ற அச்சமும் ஆம்.