பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்323

              53
சுடரப் பொன்சுடுந் தீயெனத் தொன்மறை
படரப் பொங்கிவ ரும்பகைப் பாசறை
யடரப் பொன்றில வாரண மெங்கணுந்
தொடரப் பொம்மிவ ளர்ந்துவி ளங்குமே.
 
"சுடரப் பொன் சுடும் தீ என, தொல்மறை
படர, பொங்கி வரும் பகைப் பாசறை
அடர, பொன்று இல ஆரணம், எங்கணும்
தொடரப் பொம்மி வளர்ந்து விளங்குமே.

     "மேலும் ஒளி விடுமாறு பொன்னைச் சுடும் தீயைப் போல,
பழமையான வேதம் படரக் கண்டு, பொங்கி வரும் பகையாகிய
துன்பம் வந்து தாக்கவே, அதனால் வேதம் அழிதல் இல்லாமல்,
எங்கும் தொடர்ந்து பரந்து வளர்ந்து விளங்கும்.

              54
வேண்டி யாவையும் வேண்டுவ தன்மையா
லீண்டி லாக்கிய வீடுள நின்னருட்
டாண்டி மாற்றுவ ரீங்கில தாரணி
யாண்டி யாரும ளிக்குமி னோவென்றாள்.
 
"வேண்டு யாவையும், வேண்டுவ தன்மையால்
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள்
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல, தாரணி
ஆண்டு, யாரும் அளிக்குமினோ !" என்றாள்.

     "வேண்டுமென்ற எல்லாவற்றையும், அவ்வாறு ஆகவேண்டுமென்று
நினைக்கும் தன்மையாலேயே இவ்வுலகில் ஆக்கக்கூடிய வல்லமை
கொண்ட உனது அருளைத் தாண்டி மாற்ற வல்லவர் இங்கு இல்லாத
விதமாய், இவ்வுலகத்தை நீயே ஆண்டு, யாவரையும் காப்பாயாக !" என்று
மரியாள் கூறிமுடித்தாள்.

     வேண்டு + யாவையும் - வேண்டியாவையும்; ஆண்டு + யாரும் -
ஆண்டியாரும் : யகரம் வரக் குற்றுகரம் இகரமாயின. அளிக்குமின் -
'மின்' விகுதி ஒருமைக்கு வந்தது, புதியது புகுதலாகக் கொள்க.