பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்324

              55
கன்றொ ளித்த கறவையி னின்னண
நன்றொ ளித்தந மக்கினைந் தாய்கதிர்
நின்றொ ளித்தலி னேமியு மெய்ம்மறை
யென்றொ ளித்தம னத்தினி ருண்டதே.
 
கன்று ஒளித்த கறவையின், இன்னணம்
நன்று ஒளித்த நமக்கு இனைந்து, ஆய் கதிர்
நின்று ஒளித்தலின், நேமியும் மெய் மறை
என்று ஒளித்த மனத்தின் இருண்டதே.

     கன்றைத் தப்பவிட்ட பசுவைப் போல, மரியாள் நன்மை
எதுவும் இல்லாத நம் பொருட்டு இவ்வாறு வருந்திக் கொண்டிருந்த
போதே, அழகிய கதிர்களை உடைய கதிரவன் நிலையாக மறைந்து
கொண்டமையால், உலகமும் மெய்யான வேதமென்று கண்டும்
அதனைப் புறக்கணித்த மனம் போல் இருண்டது.


              56
அணிநி றத்தசி னைப்படத் தாரொளி
மணிநி றத்தலர்ப் பந்தரில் வந்துபே
ரணிநி றத்தம ரர்புடை யார்ந்தரும்
பணிநி றத்தறம் பற்றினர் வைகினார்.
 
அணி நிறத்த சினைப் படத்து, ஆர் ஒளி
மணி நிறத்து அலர்ப் பந்தரில் வந்து, பேர்
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து, அரும்
பணி நிறத்து அறம் பற்றினர் வைகினார்.  

     அழகிய நிறமுள்ள கிளைகளால் அமைந்த மேற்கட்டியின் கீழ்,
நிறைந்த ஒளியோடு மணிகளின் நிறங்கொண்ட மலர்களால் அமைந்த
பந்தலில், பெரிய அணி வகுப்பே போன்ற தன்மையாய் வானவர் தம்மைப்
புடை சூழ்ந்து நிறைய, அரிய அணிகலன் போன்று அறத்தைப் பற்றி நின்ற
அம்மூவரும் அன்றிரவு அங்கே தங்கினர்.

               சீனயி மாமலை காண் படலம் முற்றும்

               ஆகப் படலம் 18க்குப் பாடல்கள் 1758