பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்325

பத்தொன்பதாவது

பாலை புகு படலம்

     திருக்குடும்பத்து மூவரும் பேற்சபை என்றும் பாலைவனம் வழியாகச்
சென்றது பற்றிக் கூறும் பகுதி.

                  பேற்சபை செல்லும் இடைவழி

     - விளம், புளிமாங்காய் - விளம், புளிமாங்காய்

                   1
காரெழு நிசிகோன்மை கடியவில் லொளியம்பாற்
றேரெழு சுடர்வெம்போர்ச் செங்கொடி
                           யுயர்தோன்றப்
பாரெழு களமெங்கும் பறவைகள் முரசார்ப்பப்
போரெழு பொழுதாகப் புலரிவந் திவர்போனார்.
 
கார் எழு நிசி கோன்மை கடிய, வில் ஒளி அம்பால்,
தேர் எழு சுடர் வெம் போர்ச் செங் கொடி
                               உயர் தோன்ற
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப,
போர் எழு பொழுதாகப் புலரி வந்து இவர் போனார்.

     கருமையாக ஓங்கி நின்ற இரவின் ஆட்சியை ஒழிக்குமாறு
வில்லொளியாகிய அம்பைத் தாங்கிக்கொண்டு, தேரிலே எழுந்து வரும்
ஞாயிறு கொடிய போருக்குரிய செங்கொடியை உயர்த்திக் கொண்டு
தோன்ற, உலகம் என்னும் எழுச்சிகொண்ட போர்க்களம் எங்கும்
பறவைகள் முரசு கொட்டி ஒலிக்க, போருக்கு எழத்தக்க பொழுதாக
விடியற்காலை வந்து தோன்றவே, இம் மூவரும் அங்கிருந்து எழுந்து
போயினர்.

                   2
வான்பயில் மதியேந்தும் வடிவடி வடியாளுந்
தேன்பயில் மலர்வாகைத் திருமறை யறையோனு
மூன்பயி லுருநாத னொளியடி தொழுதேந்திக்
கான்பயில் மலர்பூத்த கடிவன நெறிபோனார்.
 
வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும்,
தேன் பயில் மலர் வாகைத் திருமறை அறையோனும்,
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி,
கான் பயில் மலர் பூத்த கடி வன நெறி போனார்.