8 |
புனப்பசை
யிழந்த கானிற் பொழிதுளி யுள்ளி வந்தாற்
கனப்பசை யிழந்து தாமுங் கார்த்திரள் கனன்று வேக
வினப்பசை யிழந்த தீயோர் ரிரவலர் தம்மைக் கண்டு
மனப்பசை யிழந்த கோர மானிய சுரம தன்றோ. |
|
புனல் பசை இழந்த
கானில், பொழி துளி உள்ளி வந்தால்,
கனப் பசை இழந்து தாமும், கார்த் திரள் அகன்று வேக,
இனப் பசை இழந்த தீயோர், இரவலர் தம்மைக் கண்டு,
மனப் பசை இழந்த கோரம் மானிய சுரம் அது அன்றோ. |
நீர்ப்பசையே
இல்லாத அப்பாலைவனத்தில், மேகக்கூட்டங்கள்
மழைத் துளியை அங்குப் பொழிய நினைந்து வந்தால், மேகத்திற்குரிய
ஈரப் பசையை இழந்து, தாமும் நீங்கிப்போய் அதன் வெப்பத்தால் மேலும்
வேகும். இவ்வாறு தம்மைப் போன்ற மனித இனத்தின் மீது அன்புப் பசை
இழந்த தீயோர், தம்மை நாடிவரும் இரவலரைக் கண்டு, சிறிது ஒட்டிக்
கொண்டிருந்த மனப்பசையையும் இழந்தகொடுமைக்கு நிகரான பாலைவனம்
அது.
'புனல்' என்பது,
எதுகை ஓசைப் பொருட்டு, 'புனம்' என்று
அமைந்தது, 'புனப் பசை' என்று ஆயிற்று.
9 |
தீய்வயி
றார்ந்த காலுஞ் செஞ்சுடர்க் கதிருஞ் செந்தீ
மேய்வயி றார்ந்து வேகும் விரிமணற் பரப்புந் தீயாய்
நோய்வயி றார்ந்த கான நொடைநல மாதர் வஞ்சங்
காய்வயி றார்ந்த வாயுங் கண்களு மனமும் போன்றே. |
|
தீய் வயிறு ஆர்ந்த
காலும், செஞ்சுடர்க் கதிரும், செந் தீ
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணற் பரப்பும் தீ ஆய்,
நோய் வயிறு ஆர்ந்த கானம், நொடை நல மாதர் வஞ்சம்
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே. |
அப்பாலைவனத்து
நெருப்பைத் தன் வயிற்றுள் நிறையக் கொண்ட
காற்றும், செந்நிறக் கதிர்களை உடைய பகலவனும், செந்நெருப்பை மேய்ந்த
தன் வயிறு நிறைந்து அதனால் வேகும் விரிந்த மணற் பரப்பும்
நெருப்பாகவே மாறி, முறையே, பெறும் விலைப்பொருட்டுத் தம் நலத்தை
விற்கும் விலைமாதர் தம் வஞ்சத்தால் காய்ந்த உள்ளிடத்து நிறைந்து நின்று
வெளிப்படும் வாய்ச் சொல்லும் கண் பார்வையும் மன நினைவும் போன்றன.
|