பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்334

     அவ்வானவர், பதினான்கு வகையாகத் தெரிவு செய்யப்பட்ட பல
இன மணிகள் பதித்த நல்ல யாழ்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு,
குரல் முதலாகக் குறிக்கப்படும் ஏழு இசையொலிகள் தத்தமக்குரிய
உறவோடு தழைக்குமாறு, வெல்லப்பாகிற்கு நிகராக எழும் குரலின்
ஓசையை மூன்று நெறிகளாலும் இயக்கி, பின் அவற்றைக் கலந்து நிரவி,
இவ்வுலகில் காணப்படும் நடனங்களையெல்லாம் வாட்டிய சிறப்போடு
பாடினர்.

     யாழின் 14 வகைகள் ஒரு நரம்பு முதல் 14 நரம்புகள் வரையில்
கொண்டு அமைவன. குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம்
என இசையொலிகள் ஏழு. வலிவு மெலிவு சமன் என நெறிகள் மூன்று.

                       17
காமஞ்சால் வியப்பி லோங்கக் கண்டவை யுள்ளிப் பைம்பூந்
தாமஞ்சால் கொடியோன் விண்ணோர் தளங்களு டலைவ
                                         னென்ன
வேமஞ்சா லின்பத் தோர்ந்த விரும்புகழ் தளிர்த்துத் தேவ
நாமஞ்சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே.
 
காமம் சால் வியப்பில் ஓங்க, கண்டவை உள்ளி, பைம்பூந்
தாமம் சால் கொடியோன், விண்ணோர் தளங்களுள் தலைவன்
                                         என்ன
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து, தேவ
நாமம் சால் வழங்க, நல் யாழ் நடையொடு பாடினானே.

     பசுமையான பூமாலைக்கு ஓப்பான மலர்க் கொடியை உடையவனாகிய
சூசை, இவ்வாறு கண்டவற்றைத் தன் மனத்துள் கருதிப் பார்த்து, அன்பு
நிறைந்த வியப்போடு எழுச்சி கொண்டு, வானவர் படையணிகளுக்கெல்லாம்
தானே தலைவன் போன்று, பாதுகாப்பு நிறைந்த இன்பத்தோடு தான்
உணர்ந்த பெரும் புகழால் தழைத்து, தெய்வப் பெயர் மிகுதியாக வழங்க
வேண்டி, வானவர் அசைத்த நல்ல யாழின் போக்கிற்கு எற்ப, பின்வருமாறு
பாடத் தொடங்கினான் :