பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்34

     "யூதர்கள் நொந்து நொந்து அழுத ஓசை இடையறாது வந்து வந்து
உயர்ந்த வானத்தின் உச்சியில் நுழைந்து எட்டியது. கருணைமிக்க
ஆண்டவன் அதனைக் கேட்டு, வருந்திய அம் மக்களுக்கு இரங்கினான்;
ஒரு மலையில் முன்னுற நின்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோயிசனை
அழைத்து, ஒரு பிரம்பைக் கொடுத்து, உன் குலத்தைக் கொன்ற தன்மையாய்
வருத்தும் மன்னன்பால் தூதாக விரைந்து செல்வாயாக" என்றான்.

     ஏகுக+என்றான் - 'ஏகுக வென்றான்' என வேண்டியது,
'ஏகுகென்றான்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

                   25
கொடியகோன் வெருவ லன்னான் குலைவுறீஇ வெருவப்
                                     பேசி
விடியமா பூசை யாக விடுதியென் றவன்வி டாதேல்
நெடியசூ ரலைச்சூ ழோங்கி நிருபனோ டெவரு மஞ்சக்
கடியதோர் துயராங் குய்த்தென் கதத்திறல் காட்டு

                                     கென்றான்.
 
"கொடிய கோன் வெருவல்! அன்னான் குலைவு உறீஇ
                                   வெருவப் பேசி,
விடிய மா பூசை ஆக விடுதி!" என்று, அவன் விடாதேல்,
நெடிய சூரலைச் சூழ் ஓங்கி, நிருபனோடு எவரும் அஞ்ச,
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து, என் கதத் திறல் காட்டுக."
                                   என்றான்.

     'அக்கொடிய மன்னனுக்கு நீ அஞ்சாதே! அவனே குலைந்து
அஞ்சுமாறு பேசி, "விடிந்ததும் சிறந்த வழிபாடு நடக்குமாறு யூத மக்களை
அனுப்புவாய்" என்று கேட்டு, அவன் அனுப்பவில்லையானால், நெடிய
இப்பிரம்பை உயரச் சுழற்றி, மன்னனோடு மற்றெல்லோரும் அஞ்சுமாறு,
கடுமையான ஒரு துன்பத்தைக் கொண்டு செலுத்தி, என் சினத்தின்
வல்லமையைக் காட்டுவாயாக' என்று ஆண்டவன் கூறினான்.

     காட்டுகென்றான் - 'காட்டுகவென்றான்' என்பதன் தொகுத்தல்
விகாரம்.

                     26
ஒளியிற் சொன்ன யாவு முணர்ந்தமோ யிசன்போய்க் கூற
வாளியிற் கொடுங்கோன் கேளா தாங்கவ னெறிந்த சூரல்
வாளெயிற் றடுஞ்செம் பாந்தள் வடிவெடுத் தெழுந்தங் காடி
நீளெயிற் றழலுங் கட்டீ நிறையவிட் டுடற்றிற் றன்றோ.