பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்35

"ஒளியின் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய்க்கூற,
ஆளியின் கொடுங்கோன் கேளாது, ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு                                                 ஆடி,
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ.

     "ஆண்டவன் சொன்ன எல்லாவற்றையும் ஒழுங்காக உணர்ந்து
கொண்ட மோயிசன் போய் அரசனிடம் அவற்றைக் கூறினான். கூறியும்,
யாளி போன்ற மன்னன் அதனைக் கேட்டு நடவாது போனான். எனவே,
அங்கு அம்மோயிசன் எறிந்த பிரம்பு ஒளியுள்ள பல்லால் கொல்லும்
செந்நிறப் பாம்பு வடிவம் எடுத்து, தலைநிமிர்ந்து, படமெடுத்து அங்கு
ஆடியது; தன் நீண்ட பற்களினின்று பிறந்த நெருப்பையும் கண்ணினின்று
நிறைவாக எழுந்த தீயையும் பாய விட்டுச் சீறி நின்றது.

     'அன்றோ' அசைநிலை.

                  27
சாத்திர மாய விஞ்சைத் தன்மையி லவரும் பற்பல்
காத்திரங் காட்டி யன்னார் காட்டிய வரவைத் தேவ
சூத்திர வரவு நுங்கத் தொடர்ந்துமோ யிசன்வால் வவ்வி
வேத்திர மாய தன்மை வேந்துகண் டஞ்சி னானே.
 
"சாத்திர மாய விஞ்சைத் தன்மையில் அவரும் பல் பல்
காத்திரம் காட்டி, அன்னார் காட்டிய அரவைத் தேவ
சூத்திர அரவு நுங்க, தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி,
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே.

     "சாத்திர அடிப்படையில் அமைந்த மாய வித்தைத்தன்மை
கொண்ட அவ் எசித்தியரும் அதுபோலவே பற்பல பிரம்புகளைக் கொண்டு
பாம்புகளை உருவாக்கிக் காட்டினர். அவர்கள் காட்டிய பாம்புகளைத்
தெய்வ சூத்திரத்தால் முன் தோன்றிய பாம்பு விழுங்கியது. மோயிசன்
தொடர்ந்து இப்பாம்பின் வாலைப் பிடித்துத் தூக்கவே அது மீண்டும்
பிரம்பாகியது. எசித்து மன்னன் அத்தன்மை கண்டு அஞ்சினான்.