பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்340

                  எலீய முனிவன் வரலாறு :

     - மா, - மா, - - காய், - மா, - மா, - - காய்

                       26
தன்றோ லுரித்த பாம்பொத்த தவத்தின் வாளாற் பொறியைந்துங்
கொன்றோ லுளம்பற் றிருள்புக்கா குன்றாச் சீல விளக்கேற்றி
நின்றோன் வருங்கால் கடந்துரைக்கு நிறைசொல் வல்லோன்
                                         பாப்புகழும்
வென்றோ னெலீய மாமுனிவன் விருந்துண் டுவந்த வனமிதுவே.
 
"தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும்
கொன்றோன், உளம் பற்று இருள் புக்கா குன்றாச் சீல விளக்கு ஏற்றி
நின்றோன், வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன்,
                                              பாப் புகழும்
வென்றோன் எலீய முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே.

     "தன் தோலைச் சட்டையாக உரித்தெறிந்த பாம்புக்கு நிகராகத் தவம்
என்னும் வாளால் ஐம்பொறிகளின் ஆசையெல்லாம் கொன்றொழித்தவனும்,
தன் உள்ளத்தில் அகப்பற்று புறப்பற்று என்னும் இருள் புகாதவாறு அவியாத
ஒழுக்கம் என்னும் விளக்கை ஏற்றி நின்றவனும், வருங் காலத்தைத் தெய்வக்
காட்சியால் கடந்துசென்று கண்டுகூறும் தவறாத நிறை சொல்லில்
வல்லவனும், பாக்கள் எடுத்துக்கூறும் புகழ்களுக்கெல்லாம் மேம்பட நின்று
வென்றவனுமாகிய எலீயன் என்னும் பெருமுனிவன் விருந்து உண்டு மகிழ்ந்த
பாலைவனம் இதுவே ஆகும்.

     புக்கா - புகா: 'புகு' என்ற பகுதிக்கு ஈடாக, 'புக்கு' என்பதைப்
பகுதியாகக் கொண்டு அமைந்த ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.