7 |
காழகத்
தள்ளிருட் கதிர்கு ளித்தொளி
வாழகத் தெழுந்தமா மதிப்புத் தேளெனாச்
சூழகத் திருந்தகாத் தோன்றல் தோன்றியன்
பாழகத் தகவினோர் நுழைந்துள் ளாயினார். |
|
காழகத்து அள்
இருள், கதிர்குளித்து ஒளி
வாழ் அகத்து எழுந்த மா மதிப் புத்தேள் எனா,
சூழ் அகத்து இருந்த கா, தோன்றல் தோன்றி, அன்பு
ஆழ் அகத் தகவினோர் நுழைந்து உள் ஆயினார். |
கரிய செறிந்த
இருள் சூழ்ந்த இடத்து இருந்த அச்சோலையில்,
கதிர்களின் இடையே மூழ்கி ஒளி வாழும் அகத்தோடு கூடி எழுந்த
சிறந்த திங்கள் என்னும் தேவன் போல அக்குழந்தை நாதனாம் மகன்
தோன்ற, அன்பு ஆழ்ந்த மனம் படைத்த தகுதியாளராம் சூசையும்
மரியாளும் அதனுள் நுழைந்து உள்ளே சென்றனர்.
இங்கு, திங்களைத்
தமிழ் மரபு பற்றிப் 'புத்தேள்' என்ற தேயன்றி,
சமய மரபுப்படி தேவனாக இசைந்து கூறியதாகாது.
8 |
இழையிடைக்
குளித்ததம் மிளவ லேந்தினர்
மழையிடைக் குளித்தமின் னென்ன வந்துபூந்
தழையிடைக் குளித்தனர் மலர்ந்த தாதுதேன்
கழையிடைக் குளித்திழி கள்ளொத் தோடவே. |
|
இழை இடைக் குளித்த
தம் இளவல் ஏந்தினர்,
மழை இடைக் குளித்த மின் என்ன வந்து, பூந்
தழை இடைக் குளித்தனர், மலர்ந்த தாது தேன்
கழை இடைக் குளித்து இழி கள் ஒத்து ஓடவே. |
நூலிழையாலாகிய
சீலையிற் பொதிந்தெடுத்த தம் சிறுவனை
ஏந்தியவராய், கருமேகத்தினிடையே மூழ்கிய மின்னல் போல இருவரும்
அங்கு வந்து, மலர்ந்த பூவினின்று பொழிந்த தேன் கரும்பினுள்
மறைந்திருந்து வெளிப்பட்ட சாறுபோல் ஓட, பூக்கள் செறிந்த தழைகளின்
ஊடே சென்று மறைந்தனர்.
'இழை'
என்பது இழையாலாகிய ஆடைக்கு ஆகுபெயர்.
|