பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்355

               9
கண்சிறை படுத்திய நிழல்செய் காவிடை
மண்சிறை யொழித்தற வந்த மூவரைப்
பண்சிறை படுத்திசை பாடி வாழ்த்தின
வொண்சிறை புடைத்தபுள் ளுவந்த வீட்டமே.
 
கண் சிறை படுத்திய நிழல் செய் கா இடை,
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை,
பண் சிறை படுத்து இசை பாடி வாழ்த்தின,
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே.

     இம்மண்ணுலகின் பாவச் சிறையை ஒழித்து அறுக்கவென்று வந்துள்ள
அம்மூவரையும், கண் பார்வை மறைக்கக் கூடிய நிழல் பொருந்திய
அச்சோலையில் ஒளி பொருந்திய சிறகுகளை அடித்துக் கொண்டு மகிழ்ந்த
பறவைக் கூட்டங்கள், யாழையும் சிறை செய்யத் தக்க இசை பாடி
வாழ்த்தின.

               10
பனிவளர் பூந்துறை பருகுந் தேனுகத்
தொனிவளர் யாழெனப் பாடத் தும்பிகள்
கனிவளர் சினைதொறும் கரிய யூகங்கள்
நனிவள ராரிய நடஞ்செய் தேகினார்.
 
பனி வளர் பூந் துறை பருகும் தேன் உகத்
தொனி வளர் யாழ் எனப் பாடத் தும்பிகள்,
கனி வளர் சினை தொறும் கரிய யூகங்கள்
நனி வளர் ஆரிய நடம் செய்து, ஏகினார்.


     0தாம் குளிர்ச்சிப் பொருந்திய பூக்கூட்டங்களிடையே பருகும்
தேனின் இனிமையும் கெடுமாறு ஓசையில் உயர்ந்த யாழிசை போல
வண்டுகள் பாடக் கேட்டும், பழங்கள் நிறைந்த கிளை தோறும் நின்று
கருங் குரங்குகள் மிக வளர்ச்சி பெற்ற ஆரியக் கூத்து ஆடக் கண்டும்,
அம்மூவரும் சோலையினுள் சென்றனர்.

     ஆரிய கூத்து - அருமையான நடனம், செய்து - செய்ய எனும்
பொருளில் வந்தது.