பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்357

வீணையைப் போன்ற இசை பாடும் பறவைகள் விருப்பம் மிக்குப் பாடிக்
கொண்டிருக்கும் தவம் சார்ந்த இவ்விடத்திற்கு நீங்கள் சேர்ந்து வந்த
காரணமும் சொல்லுங்கள்" என்றனர்.

                   13
நசைசேர் வான்பதியோர் நாமே யுடல் சேர் நடலையறா
வசைசேர் மண்பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின்
மிசைசேர் பிரான்பணியா லெசித்து நேடி விரும்பியபுள்
ளிசைசேர் வனஞ்சேர்ந்தோ மென்றான் பூந்தா
                                தெழிற்கொடியான்.
 
"நசை சேர், வான் பதியோர் நாமே; உடல் சேர் நடலை அறா,
வசை சேர் மண் பதியோர் நாமே; யூதர் மண்டிலத்தின்
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி, விரும்பிய புள்
இசை சேர் வனம் சேர்ந்தோம்" என்றான் பூந் தாது எழில்
                                   கொடியான்.

     பூ இதழ்கள் அழகுடன் விளங்கும் மலர்க் கொடியை உடையவனாகிய
சூசை, "ஆசை அளவில், சென்று சேர்ந்த வானுலகைக் குடியிருப்பாகக்
கொண்டவர்களும் நாங்களே; உடலுக்குரிய துன்பங்கள் அறாத தன்மையால்
இகழ்ச்சிக்குரிய இம் மண்ணுலகைக் குடியிருப்பாகக் கொண்டவர்களும்
நாங்களே; யூதர் தம் நாட்டிற் பொருந்தியுள்ள ஆண்டவன் கட்டளையால்
எசித்து செல்லத் தேடி, விரும்பத்தக்க பறவைகளின் பாடல் பொருந்தியுள்ள
இவ் வனத்தை வந்தடைந்தோம்" என்றான்.

     நாமே என்பது யாமே என்னும் பொருளில் வந்தது (20 : 60)

                  14
வைத்த திருவீங்கு மெசித்து நாட்டின் வாயிலிதே
பொய்த்த வழிகாட்டிப் பொழிற்கண் மயங்கா புடைவம்மின்
றுய்த்த வருளுமிழு முகநல் லிரென்று சொற்றிமலர்
மொய்த்த தேன்றுளிக்கும் வழியம் மோனர் முன்னடந்தார்.
 
"வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே
பொய்த்த வழி காட்டு இப் பொழில்கண் மயங்கா, புடை வம்மின்,
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர்!" என்று சொற்றி, மலர்
மொய்த்த தேன் துளிக்கும் வழி, அம் மோனர், முன் நடந்தார்.