பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்358

     அம் முனிவர்கள், "உள்ளத்தில் துய்த்த தெய்வ அருளை
வெளிக்காட்டும் முகம் படைத்த நல்லவர்களே, சேர்த்து வைத்த செல்வம்
பெருகிக் கிடக்கும் எசித்து நாட்டுக்குச் செல்லும் வாயில் போன்றது இச்
சோலையே ஆகும். பலவாறாகப் பிரிந்து பொய்யான வழியைக்
காட்டுவதற்கும் இடமுள்ள இச்சோலையில் நீங்கள் மயங்கா வண்ணம்,
நாங்கள் செல்லும் பக்கமாக வாருங்கள்" என்று சொல்லி, மலர்களில்
திரண்டு கிடந்த தேனைப் பொழியும் நேர் வழியில், தாம் முன்னே நடந்து
வழி காட்டினர்.

     நல்லீர் என்பது நல்லிர் எனக் குறுகி நின்றது.

                    15
கானார் மலர்முகைக்கண் விழித்து நோக்கிக் கனிநகைத்த
தேனார் காவினெடு நெறிபோய்த் தீஞ்சொல் செல்குறைய
மானார் மனமெனமுள் மலிந்த வேயார் வனங்கடந்து
பானார் கதிர்கண்ட வெளியே கண்டு பரிவற்றார்.
 
கான் ஆர் மலர் முகைக் கண் விழித்து நோக்கிக் கனி நகைத்த
தேன் ஆர் காவில் நெடு நெறி போய், தீம் சொல் செல் குறைய,
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து,
பான் ஆர் கதிர் கண்ட வெளியே கண்டு பரிவு அற்றார்.

     மணம் பொருந்திய மலர்கள் மொட்டுக்களாகிய தம் கண்களைத்
திறந்து பார்த்துக் கனிவோடு சிரித்த தன்மையாய்ச் சிந்திய தேன் நிறைந்த
சோலையில், தமக்குள் பேசிக் கொண்ட இனிய சொற்களால் நடை வருத்தம்
குறைய அவர்கள் நெடுவழி கடந்து போய் பகைவர் மனம் போல் உள்ளே
முள் நிறைந்த மூங்கில் செறிந்த சோலையைக் கடந்து, பகலவனின் நிறைந்த
கதிர்களைக் காணக் கூடிய வெளியிடத்தைக் கண்டு துன்பம் நீங்கினர்.

     மானார் - சொற்குறிப்பு அகராதி காண்க. செல் - செல்லல்: 'செல்'
எனக் கடை நிறைந்தது.