பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்359

                  16
கமுகும் படர்கதலிக் கனிக ணக்குங் கரும்பொருபால்
கமுகும் பூகமுமார் கனிமுத் தணிந்த காவொருபா
லமுகுஞ் செங்கமல வாவி யொருபா லணிசெய்க
வமுகுஞ் சித்திரநற் கூடஞ் சென்றா ரத்தகவார்.
 
கம் உகும் படர் கதலிக் கனிகள் நக்கும் கரும்பு ஒரு பால்,
கமுகும் பூகமும் ஆர் கனி முத்து அணிந்த கா ஒரு பால்,
அம் உகும் செங் கமல வாவி ஒரு பால் அணி செய்க,
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அத் தகவார்.

     படர்ந்த வாழைகள் தம் தலையில் விடுக்கும் கனிக்குலைகளைத்
தடவும் கரும்புத் தோட்டம் ஒரு பக்கமும், கமுகுகளிலும்
கூந்தற்பனைகளிலும் நிறைந்த கனிகளை முத்துப் போல் அணிந்து நின்ற
தோட்டம் மற்றொரு பக்கமும், நீரில் தேன் சொரியும் செந்தாமரைத்
தடாகம் வேறொரு பக்கமுமாக அழகு செய்து நிற்க, இவற்றினிடையே
அழகு சிந்தும் நல்ல சித்திரக் கூடத்தை அத் தகுதி வாய்ந்தோர் சென்று
சேர்ந்தனர்.

     முதல் அடியில், 'படர் கதலிக் கம் உகும் கனிகள்' எனச் சொற்களை
மாற்றிக் கூட்டுக. செய்க என்பது செய்ய எனும் பொருளில் வந்தது.

                     17
வினைகள் மாறியவண் டவஞ்செய் மோனர் விழைந்திறுப்பச்
சுனைகள் கண்குவளை யிமையா நோக்கச் சுனைக்கரைமேற்
சினைக ளாகியவா யிரதூ ணாட்டிச் சித்திரங்கள்
நனைகள் தெளித்தெழுதி வனைந்த கூட நடுவதிந்தார்.
 
வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப,
சுனைகள் கண் குவளை இமையா நோக்க, சுனைக் கரைமேல்
சினைகள் ஆகிய ஆயிர தூண் நாட்டி, சித்திரங்கள்
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூட நடு வதிந்தார்.

     பாவ வினைகள் மாறும் பொருட்டு வளமான தவத்தைச் செய்யும்
முனிவர்கள் விரும்பித் தங்குவதற்கென்று, தடாகங்களில் கண் போன்ற
கருங்குவளை மலர்கள் இமை கொட்டாது நோக்குவன போன்று அமைய,
தடாகக் கரைமேல் உறுப்புகள் என்றாற்போல் ஆயிரம் தூண்களை நாட்டி,
பூவரும்புகளைச் சாயத்தில் தோய்த்துத் தெளித்துச் சித்திரங்கள் எழுதி
அழகு செய்த கூடத்தின் நடுவே வந்து அவர்கள் அமர்ந்தனர்,