பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்363

"திருப் புகழே, புகழ் மறையே, திருவே, நூலே குடி வைகும்,
மருப் பொழிலே, விரைப் பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து,
உருப் புகை வெம் வனச் சுரம் வந்து, உவப்ப இங்கண்
                                      சென்றனம்" என்று,
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான்.

     தனக்கு இருப்பிடம் இதுவே என்று வேதம் அமர்ந்து செலுத்தும்
தேர் போன்ற மார்பை உடையவனாகிய சூசை, அம்முதியவனை நோக்கி,
"சிறந்த புகழும், புகழுக்குரிய வேதமும், செல்வமும், அறிவு நூல்களும்
குடி கொண்டிருப்பதும், மணம் கொண்ட பூஞ்சோலைகளும் மணம் பரப்பும்
வயல்களும் சிறந்து வளர்வதுமாகிய யூதேய நாட்டிலிருந்து புறப்பட்டு, உருக்
கொண்டு எழுந்த புகை மண்டும் வெப்பமான பாலைவன வழியே நடந்து
வந்து, இங்கு மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தோம்" என்று சொன்னான்.

     'புகழே' என்பது முதலாக 'பணையே' என்பது ஈறாக நின்ற ஏகாரங்கள்
எண்ணேகாரங்கள் என அறிக. 'புகை' என்பது, அது எழுவதற்குக்
காரணமான நெருப்பைச் சுட்டி, அப் பாலைவன வெப்பத்தின் கொடுமை
குறித்தது ஆகுபெயர்.

                 23
நாகத்தா லுண்டமதி நாறா குன்று நவையொப்ப
மோகத்தா லுண்டமனம் முதிர்பற் செல்வ முரிந்துகெடும்
போகத்தால் விளை நசைத்தீப் பொறாது தண்காப்
                                   புக்கனமென்
றாகத்தா ரளுள்மிக்க வதிட்ட னென்பா னறைகின்றான்.
 
"நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப,
மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும்
போகத்தால் விளை நசைத் தீப் பொறாது தண் காப்
                                        புக்கனம்" என்று,
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான், அறைகின்றான்.