|
தன்
நெஞ்சிலே பொருந்திய அருளால் மிக்க அதிட்டன் என்னும்
அம்முதியவன், அது கேட்டு, "பாம்பால் உண்ணப்பட்ட மதி வெளியே
தோன்றாமல் ஒளி குன்றும் துன்பத்திற்கு ஒப்பாக, மோகத்தால்
உண்ணப்பட்டமனமும் தன்னிடத்துள்ள சிறந்த பல செல்வங்களும் அழிந்து,
தானும் கெடும். இதனை அறிந்து, இன்ப நுகர்ச்சி மீது விளையும் ஆசைத்
தீயைப் பொறுக்கமாட்டாமல், நாங்களும் இக்குளிர்ந்த சோலையை
வந்தடைந்தோம்" என்கின்றான்.
பல்
செல்வம் : அருட் செல்வம், பொருட் செல்வம், கல்விச்
செல்வம் முதலியன. 'ஆசைத் தீயைத் தவத்தால் தணிக்க' என்று கருத்து
விரிக்க.
| 24 |
சிக்குருவை
வித்தியபின் திண்கா ழாச்சா விளைவாமோ
சொக்குருவை யுண்டுண்டு துகளோ டாசை வளர்ந்தனபின்
னிக்குருவைக் காட்டியபூ வெழுதுங் காவுஞ் சுடுமன்றோ
வொக்குருவை யொழித்துநசை யொழியு மென்றான்
மலர்க்கொடியான். |
| |
"சிக்குருவை வித்திய
பின், திண் காழ் ஆச்சா விளைவு ஆமோ?
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின்,
இக்கு உருவைக் காட்டிய பூ எழுதும் காவும் சுடும் அன்றோ?
ஒக்க உருவை ஒழித்து, நசை ஒழியும்" என்றான் மலர்க் கொடியான் |
மலர்க் கொடியை
உடையவனாகிய சூசை, அதற்கு மறு மொழியாக,
"முருங்கை விதையை விதைத்த பின், அது முளைத்துத் திண்ணிய வைரம்
கொண்ட ஆச்சா மரமாக அமைதல் கூடுமோ? ஆழகிய உருவத்தைக்
கண்ணால் உண்டு உண்டு, அதன் மூலம் பாவத்தோடு ஆசையும் வளர்ந்த
பின், தேனின் உருவத்தை உள்ளே கொண்டு கூட்டிய பூக்களை எழுதிய
சித்திரம் போல் காட்டி நிற்கும் சோலையும் சுடும் அல்லவா? தன் உடலை
முழுதும் ஒழித்து விடின், ஆசையும் அதனோடு ஒழியும்" என்றான்.
ஒக்க
+ உருவை - ஒக்கவுருவை எனற்பாலது, ஒக்குருவை என
நின்றது தொகுத்தல் விகாரம். பாவத்திற்குக் காரணமான ஆசையை
ஒழிப்பதற்குக் கண்ணடக்கத்தோடுகூடிய உடலொடுக்கம் துணையாவதன்றி,
அஃது அமையாத இடமாற்றம் பயனற்ற தென்பது கருத்து.
|