பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்368

பொன் சாயல் அரிது அங்கண் பொறித்த காதை என்றன கால்,
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி, "மதிப் புத்தேள்
தன் சாயல் மதி வல்லோய், தளிர்த்த ஐயம் தீர் சிறிது;
புன் சாயல் சொல்வல்" எனப் புகல் மீண்டு உற்றான்,
                                      தவ மூத்தோன் :

     பொன்னின் சாயலாக அரிய முறையில் அங்கு வரையப்பட்ட
கதையென்று சூசை குறிப்பிட்டதும், தவ முதியோனாகிய அதிட்டன்,
ஒளியின் சாயலாகத் தன் கண்கள் கனிய விரும்பி நோக்கி, "திங்கள்
தேவனின் சாயல்போல் அறிவில் வல்லவனே, என் மனத்தில் உதித்த
ஐயத்தைச் சிறிது தீர்த்து வைப்பாய்; அதனை நான் புன்மையின் சாயலாக
முன் சொல்வேன்" என்று கூறி, மீண்டும் பின்வருமாறு சொல்லலானான்:

                      நீபகன் வரலாறு

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                  30
புதிவளர் திங்கட் கோட்டுப் புரைவள ரசனி வில்லான்
கதிவளர் வளிமுன் பாய்மா கடந்தபோர் முகத்தே றன்னா
னிதிவளர் மகுடம் பூண்ட நீபக னென்னுங் கோமான்
றுதிவளர் துறவு வெஃகித் துணர்வளர் காவில் வந்தான்.
 
புதி வளர் திங்கள் கோட்டுப் புரை வளர் அசனி வில்லான்,
கதி வளர் வளி முன் பாய் மா கடந்த போர் முகத்து
                                      ஏறு அன்னான்
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான்
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான்

     "புதிதாகத் தோன்றி வளரும் பிறைமதியின் கொம்பு போன்று
வளைவாய் அமைந்து இடி போல் அம்புகளைச் சொரியும் வில்லை
உடையவனும், பல வகை நடை நலம் கொண்டு, வீசும் காற்றையும்
முந்திக் கொண்டு பாயும் குதிரை மீது அமர்ந்து வென்ற போர்
முனையில் பகைவருக்கு ஆண் சிங்கம் போன்றவனும், பொன்னின்
ஒளி வளரும் முடியைச் சூடியவனுமாகிய நீபகன் என்னும் மன்னன்,
புகழத்தக்க துறவறத்தை விரும்பி, பூங்கொத்துக்கள் தழைத்து வளரும்
இச்சோலைக்கண் வந்து சேர்ந்தான்,

     கதி - குதிரை நடை வகை.