பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்369

                  31
நீளரி மதர்க்கண் ணார்தம் நெடும்பகை துறத்த லுள்ளி
வேளரி தமர்ந்த போரில் வெற்றிகொண் டுவந்து மீண்ட
கோளரி நடப்ப தேபோற் கோன்மையு நகரு நீக்கி
வாளரி திடையிற் பூட்டி வந்திவண் டனித்துச் சேர்ந்தான்.
 
நீள் அரி மதர்க் கண்ணார்தம் நெடும் பகை துறத்தல் உள்ளி
வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு, உவந்து மீண்ட
கோள் அரி நடப்பதே போல், கோன்மையும் நகரும் நீக்கி;
வாள் அரிது இடையில் பூட்டி, வந்து இவண் தனித்துச் சேர்ந்தான்.

     "செவ்வரி படர்ந்த உயிரூட்டமுள்ள நீண்ட கண்களைக் கொண்ட
மகளிரால் விளையும் காமமென்னும் நெடிய பகையைத் துறக்க நினைந்து,
மன்மதன் வெல்வதற்கரிதாக நிலைத்துச் செய்த போரில் வெற்றிகொண்டு,
வெற்றியால் மகிழ்ந்து மீண்ட கொல்லும் தன்மை வாய்ந்த ஆண் சிங்கம்
நடப்பதுபோல் நடந்து, தனக்குரிய அரசையும் தலைநகரையும் துறந்து,
அரச னென்பதற்கு அடையாளமான வாளை மட்டும் அரிதாகத் தன்
இடையில் அணிந்துகொண்டு, தனியாக இங்கு வந்து சேர்ந்தான்.

                  32
தெள்ளுற மின்னி யார்த்த செல்லுறும் படர்ந்த நெற்றி
கள்ளுற மலர்ந்த கானங் கண்டரு குறுங்கால் வேட்கை
யுள்ளுறப் புதிய தென்ற லுந்துவே ளெதிர்கொண் டன்ன
வள்ளுற வாசங் கான்ற வனிலமாங் கெதிர்கொண் டானே.
 
"தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி
கள் உற மலர்ந்த கானம் கண்டு, அருகு உறுங் கால், வேட்கை
உள் உறப் புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே.