பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்372

                    36
பொற்கலத் தரிட்ட மேந்திப் பூத்தகா நுழையும் போழ்திற்
சொற்கலத் தினிய பாடல் தொடர்ந்தகின் னரம்பண் மற்றப்
பற்கலத் தெழுந்த வோதை பரிவற விமிழிற் கேட்டு
விற்கலத் தலர்ந்த விக்கா விரும்பிவந் தனரா ரென்றான்;
 
"பொன்கலத்து அரிட்டம் ஏந்திப் பூத்த கா நுழையும் போழ்தின்,
சொல் கலத்து இனிய பாடல், தொடர்ந்த கின்னரம் பண் மற்றப்
பல் கலத்து எழுந்த ஓதை பரிவு அற இமிழின் கேட்டு,
'வில் கலத்து அலர்ந்த இக் கா விரும்பி வந்தனர் ஆர்?' என்றான்.

     "பொற்கலத்தில் மதுவை ஏந்திய தன்மையாய்ப் பூத்து நின்ற
அச்சோலையினுள் நுழையும்போது, சொல்லாகிய கலத்து இட்டு வழங்கிய
இனிய பாடலையும், அதனோடு தொடர்ந்து வீணையினின்றும் யாழினின்றும்
மற்றும் பல இசைக் கருவிகளினின்று எழுந்த ஒசையையும் தன் வருத்தம்
நீங்க இன்பமாய்க் கேட்டு, 'ஒளி மிக்க அணிகலன் போல் மலர்ந்து நின்ற
இச்சோலையை விரும்பி வந்தடைந்தோர் யார்?' எனக் கேட்டான்:

                   37
காவெலா முகைத்துப் பூப்பக் காலெலாஞ் சவரம் வீசப்
பூவெலா நறுந்தேன் றூவப் புள்ளெலாம் விளித்துப் பாடக்
கூவெலா நிகரா வண்ணக் கோலநீ ணெறிபோ யப்பால்
மேவெலா வனப்பு வாட்டும் வியன்றவோர்
                              வெளியுட் சென்றான்.
 
"கா எலாம் முகைத்துப் பூப்ப, கால் எலாம் சவரம் வீச,
பூ எலாம் நறுந் தேன் தூவ, புள் எலாம் விளித்துப் பாட,
கூஎலாம் நிகரா வண்ணக் கோல நீள் நெறி போய், அப்பால்,
மேவு எலா வனப்பு வாட்டும் வியன்ற ஓர் வெளியுள் சென்றான்.

     "அச்சோலை முழுவதும் அரும்பெடுத்து மலர்ந்து நிற்கவும்,
காற்றெல்லாம் சாமரை வீசவும், பூக்களெல்லாம் நறுமணமுள்ள தேனைச்
சொரியவும், பறவைகளெல்லாம் தன்னை அழைத்தாற் போல் பாடவும்,
உலக முழுவதும் நிகரற்ற வண்ணக் கோலத்து அழகு கொண்ட நீண்ட
வழியில் நடந்துபோய், அப்பால் எங்கும் பொருந்திய அழகுகளையெல்லாம்
வாடச் செய்யும் அழகுள்ள ஒரு பரந்த வெளியை அடைந்தான்: