பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்373

                    38
மோட்டிளந் தேறல் தூவி முகைத்தரு வொழுங்கிற் சூழ
நாட்டிளம் பிடியார் சாயல் நகைமயி லகவி யாடச்
சேட்டிளஞ் சினைக டோறுந் திருமணிச் சாயற் பைம்பூ
வேட்டிளம் விழிகள் விண்ட விளந்தரு நடுவிற் கண்டான்.
 
"மோட்டு இளந் தேறல் தூவி, முகைத் தரு ஒழுங்கின் சூழ,
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட,
சேட்டு இளஞ் சினைகள் தோறும் திரு மணிச் சாயல் பைம் பூ
வேட்டு இளம் விழிகள் விண்ட இளந் தரு நடுவில் கண்டான்.

     "தம் உச்சியில் நின்று புதிய தேனைச் சொரிந்து மலர்ந்த மரங்கள்
ஒழுங்காகத் தன்னைச் சுற்றி நிற்கவும், தன் அடியில் நாட்டிலுள்ள இளம்
யானைகளுக்கு நிகரான மகளிர்தம் சாயலைக் கொண்டு மகிழ்ந்த மயில்கள்
கூவி ஆடிக்கொண்டிருக்கவும், தன் அழகிய இளங் கிளை தோறும் அழகிய
மணிகளின் சாயல் கொண்ட பசிய மலர்கள் அவளைக் காண விரும்பித் தம்
கண்களைத் திறந்தாற் போல் மலர்ந்து நின்ற ஓர் இளமரத்தை அவற்றின்
நடுவே கண்டான்.

                      39
மீனிறத் தலர்ந்த பைம்பூ விரைநிறத் தொழுகத் தீந்தேன்
கோனிறத் திடையில் வாய்ந்த கொழுந்தரு வணுகி நோக்கிக்
கானிறத் தலர்ந்த சாந்தக் கடிமர மென்று நிற்பப்
பானிறத் தினிய பண்சேர் பாடல்கேட் டொல்கிப் பார்த்தான்.
 
"மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன்,
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழுந்தரு அணுகி நோக்கி,
கான் நிறத்து அலர்ந்த சாந்தக் கடி மரம் என்று நிற்ப,
பால் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு, ஒல்கிப் பார்த்தான்.