பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்382

"கொல் வினை அலகை போய், தன் கொள்கையில்
                               கானம் தோன்றி,
புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த
                               நீபகன் என்பானே.
நல் வினை பகைத்த பேய்கள், நயமொரு வெருவு காட்டி
மல் வினை ஒழிக்க ஓர்ந்த மாயையே இன்றும் எஞ்சா.

     "இவ்வாறு ஆன்மாவைக் கொல்லும் வினைக்குரிய பேய்கள் ஒழிந்து
போகவே, இச்சோலையும் தன் வழக்கமான இயல்போடு விளங்கியது.
பேய்களை வென்று பொலிந்த நீபகன் என்பவன் பாவம் என்னும் இழிந்த
செயலை அறுக்கும் பொருட்டு இங்கே தவம் புரிந்தான். எனினும்,
நல்வினைகளையெல்லாம் பகைத்த பேய்களோ, நயமும் பயமும் காட்டி,
பாவத்தை எதிர்த்துச் செய்யும் போரை ஒழிக்கும் பொருட்டு நினைந்து
செய்யும் மாயைகளில் இன்றும் தளர்வதில்லை.

                    54
வெங்கணே ரிரவி யொந்த விடலையே நெடுநா னோற்ப
விங்கணே யுறைந்த போழ்தி லிவையெலாம் வரைவித் தானா
லங்கணே ரெழிற்பார்த் தல்லா லறிகிலே மறிதி யேல்வெண்
டிங்கணேர் தெளித்த நூலோய் செப்புதி யென்றான் மூத்தோன்.
 
"வெங் கண் நேர் இரவி ஒத்த விடலையே, நெடு நாள் நோற்ப
இங்கணே உறைந்த போழ்தில், இவை எலாம் வரைவித்தான் ஆல்.
அங்கண் நேர் எழில் பார்த்து அல்லால், அறிதியேல், வெண்
திங்கள் நேர் தெளித்த நூலோய், செப்புதி" என்றான் மூத்தோன்.

     "வானத்தின் வெப்பமான கண் போன்ற பகலவனை ஒத்த
வாலிபனாகிய அந்நீபகன், இங்கே நெடுங்காலம் தவம் மேற் கொள்ளத்
தங்கியிருந்த காலத்தில் இச்சித்திரங்களையெல்லாம் தானே வரைந்தான்.
நாங்களோ அச்சித்திரங்களில் அமைந்துள்ள அழகைப் பார்ப்பதேயல்லாமல்,
அவை குறித்த பொருளை அறியோம். வெண்ணிறத் திங்களுக்கு நிகராகத்
தெளிந்த வேத நூல் அறிவு படைத்தவனே, நீ இவற்றைப் பற்றி
அறிவாயேல், எங்களுக்குத் தெரிவிப்பாய்" என்று அம்முதிய முனிவன்
கேட்டுக் கொண்டான்.