பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்386

"அறம் கொண்டு இவன் வளர்ந்தே, ஆங்கு வரைந்திட்டன போல்,
உறங்கும் பொழுது, ஈர் ஐந்து ஒரு மீனும் இரு சுடரும்
இறங்கும் தன்மையில் வந்து, இறைஞ்சுவ போல் இணைத் தன்தாள்,
பிறங்கும் கதிர் தவழும் பெற்றியை 'கண்டேன்' என்றான்.

     "அங்குச் சித்திரமாகத் தீட்டியுள்ளமை போல், இவன் அற
நெறியைக் கடைப் பிடித்து வளர்ந்து, ஒரு நாள் உறங்கும் பொழுது,
பதினொரு விண்மீன்களும் ஞாயிறு திங்களாகிய இரு சுடர்களும்
வானத்தினின்று இறங்கும் தன்மையாக வந்து, தன் இரு கால்களையும்
வணங்குவது போலவும், அதனால் தன் கால்களில் அவற்றில் விளங்கும்
கதிரொளி தவழும் தன்மையும், 'கனவாகக் கண்டேன்' என்றான்.

     2 * 5 + 1 = 10 + 1 = 11 : 'உறங்கும் பொழுது' என்றமையால்,
'கனவு' வருவித்து உரைக்கப்பட்டது. 'இணைத் தன் தாள்' என்றது 'என்
இணைத் தாள்' என்று அமைந்திருக்குமாயின். 'உறங்கும்
பொழுது......கண்டேன்' என, யாவும் ஆணரன் கூற்றாக அமைந்து
சிறந்திருக்கும்.

                  60
தெரியா நாந்தந்தை தாயுனையோ தெண்டனிட
வெரியார் சுடர்தொழுத தெனப்பகைத்தார் மூதுனரே
பெரியா ருடைச்செல்வங் காண்சிறியார்
                              பெரும்பகையே
யுரியா ராவரென வுரைத்தார்நூ லுடைநீரார்.
 
"தெரியா, நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட
எரி ஆர் சுடர் தொழுதது!' எனப் பகைத்தார் மூதுனரே;
'பெரியார் உடைச் செல்வம் காண் சிறியார் பெரும் பகையே
உரியார் ஆவர்' என உரைத்தார் நூல் உடை நீரார்.

     "நூலறிவு படைத்த பெரியோர், 'பெரியோர் பெற்ற செல்வத்தைக்
காணும் சிறியோர் அது காரணமாகவே பெரும் பகை கொள்ளுதற்கு உரியர்
ஆவார்' என உரைத்தனர்; அதற்கேற்ப, ஆணரணின் அண்ணன்மாரும்,
'உயர்வு தாழ்வு தெரியாமல், நாங்களும் நம் தந்தை தாயாரும் தெண்டனிட்டு
உன்னைத் தொழுவதற்கு அடையாளமாகவோ ஒளி நிறைந்த சுடரெல்லாம்
உன்னைத் தொழுதது? என்று கூறிப் பகை கொண்டனர்.