பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்388

"அழுவான்; அடி விழுவான்; அயர்ந்து ஒருங்கு கை கூப்பித்
தொழுவான்; நனி துதிப்பான்; சுழன்று ஏங்கி விம்முவன் ஆம்;
விழுவான் என உதைத்து, வேங்கை அனார் வெகுண்டு, அற நூல்
வழுவானைத் தூக்கி வற்றிய தாழ் குழிப் பெய்தார்.


     "கிணற்றுள் வீழ்த்துமுன், ஆணரன் அழுவான்; தமையர் அடியில்
சரணென்று விழுவான்; கலங்கி, இரு கையும் ஒருங்கே குவித்துத்
தொழுவான்; அவர்களை வெகுவாகத் துதிப்பான்; ஒவ்வொருவர் முகமாகச்
சுழன்று நோக்கி விம்முதலும் ஆவான்; அதன் பின்னும், வேங்கை போன்ற
அவர்கள் சினந்து, இவன் விழத்தக்கவனே என்று உதைத்து, அற நூல்
வழுவாத ஆணரனைத் தூக்கி, நீர் வற்றிய ஆழக் குழியில் தள்ளிவிட்டனர்.

                  63
இப்பால் வரைந்தகிணற் றாணரனை யிட்டனபின்
அப்பால் வரித்தபடி யதர்வரவா ணிகர்கண்டு
துப்பா லீங்கொழிந்தாற் றுறும்பொலிசை யாதிவர்க்கு
விப்பா மெனவெடுத்து விற்றளித்தா ரக்கொடியார்.
 
"இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின்,
அப்பால் வரித்த படி, அதர் வர வாணிகர் கண்டு,
'துப்பால் ஈங்கு ஒழிந்தால், துரும் பொலிசை யாது? இவர்க்கு
விப்பாம்' என எடுத்து, விற்று அளித்தார் அக்கொடியார்.

     "இங்கு வரைந்துள்ள கிணற்றினுள் ஆணரனைத் தள்ளிய பின்,
அங்கு எழுதியுள்ளபடி, அவ்வழியே வணிகர் சிலர் வரக்கண்டு, உணவு
இன்மையால்,இவன் இங்கு மடிந்தால், நமக்கு வரும் பயன் என்ன?
இவர்களுக்கு இவனை விற்று விடுவோம், என்று அவனைத் தூக்கி
எடுத்து, அக்கொடியோர் விற்றுக் கொடுத்துவிட்டனர்.

     'விற்பாம்' என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'விப்பாம்'
என நின்றது.

     துப்பு - உணவு. 'துப்பால்' என்ற இடத்து, 'நோய்க்கு மருந்து'
என்பது போல், 'இன்மையால்' என்ற பொருள் விளக்கத் துணைச் சொல்
விரித்து உரைக்கப்பட்டது.