பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்398

     "அவள். 'உன் கண்ணே மன்மதனின் மலரம்பாகி என் நெஞ்சைப்
பிளந்த பின், நிறமுள்ள என் கண்ணுக்கு மறைந்து போவதோ!' என்று கூறி,
உயர்ந்த படுக்கையை விட்டொழித்து விரைந்து பாய்ந்து, அவன் தன்
உடைமேல் அணிந்திருந்த மேலாடையைச் சிக்கென்று பிடித்தாள். அவனோ,
தன்னோடு பாங்காகப் பொருந்திய அம்மேலாடையும் பகையென உதறி
விட்டு, அம்பும் பிந்துமாறு முன்னே ஓடி நீங்கினான்; தீங்கு நாடிய
அப்பெண்ணின் இழிநிலைக்கு இரங்கியதேயல்லாமல், பாவம் விளைவிக்கும்
அவள் ஆசைக்கு இரங்காதவன் ஆனான்.

                    76
நகைத்தன தன்மைத் தொளித்தன னென்று நசைகெடப்
                               
பெரும்பகை வீங்கி
முகைத்தன தன்மைத் தென்முகம் வெறுத்து முயங்கலு
                              
மறுத்ததீக் கொடியான்
பகைத்தன தன்மைத் தென்னையே யெண்ணிப் பணிகுவா
                              
னெனக்கொடி துணர்ந்தா
ளகைத்தன தன்மைத் தன்பிற்கும் பகைக்கு மளவிலா
                              
பொங்குவர் மடவார்.
 
"நகைத்தன தன் மைத்து ஒளித்தனன் என்று, நசை கெடப் பெரும்
                                   பகை வீங்கி,
'முகைத்தன தன் மைத்து என்முகம் வெறுத்து, முயங்கலும் மறுத்த
                                   தீக் கொடியோன்,
பகைத்தன தன் மைத்து, என்னையே எண்ணிப் பணிகுவான்!' என,
                                   கொடிது உணர்ந்தான்;
அகைத்தன தன் மைத்து, அன்பிற்கும் பகைக்கும் அளவு இலா
                                   பொங்குவர், மடவார்.

     "மகளிர், அடிபட்ட தன்மையாக, அன்பு கொள்ளுமிடத்தும்
பகைகண்டவிடத்தும் அளவின்றிப்பொங்குவர்; அவ்வாறே, தன்னை
இகழ்ந்த தன்மையாக ஒளித் தோடினானென்று கண்டு, தன் ஆசை
கெட்டமையால் அவன் மீது பெரும் பகை பெருகி, 'மலர்ந்த மலர்
போன்ற என் முகத்தை வெறுத்து, என்னைத் தழுவவும் மறுத்த இத் தீய
கொடியவன், நான் பகைத்த தன்மையாகச் செய்யவிருப்பதைக்கண்டு, என்னையே புகலிடமாக எண்ணி வந்து பணிந்து நிற்பான்!' என்று, தான்
செய்ய வேண்டிய கொடியது இன்னதெனக் கண்டுணர்ந்தாள்.