பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்402

     "வளரும் அனுபவ அறிவால் உயரிய தன்மையுள்ளோர்,
பெண்மையோடு கொள்ளும் நட்பே அறிவற்ற போக்கு என
உரைத்துள்ளனர். அவள் முதலில் மிகுதியான அன்புடையவள்
போல் தன்னைக் காட்டிக்கொண்டபின், மேன்மையான ஒழுக்கத்தில்
நிகரற்றவனாகிய ஆணரன் காமாதுரனென்ற இழிவை எய்தி
வருந்துமாறு, நஞ்சு போன்ற வஞ்சத்தால் கொல்லும் அளவிற்கான
பகையைக் காட்டினாள்; பெண்ணின் செயல் முறை இது வெனில்,
படத்திற்கு நிகரான பெண்மை அழகை இனிதென்று எவரும்
விரும்பாதீர்!" என்று பாணிகன் என்றும் பெருமுனிவன் சொன்னான்.

     'உணர்வு + உயரிய' - 'உணர்வுயரிய' என வந்தது தொகுத்தல்
விகாரம்:

                      81

முற்பட வுரைத்த தன்மையி னல்லோ முழுவது நாடொழிந்
                                     தல்லாய்
விற்பட வழங்கி வளம்பெற லரிய வினையென வதிட்டனுங் கூற
மற்பட நிமலன் செய்யரு டன்னால் வரும்பகை திருநலம்
                                     பயத்தல்
நற்பட வருளிக் கேண்மினீ ரென்ன நறுமல ருயர்த்தன
                                     னவின்றான்.

 
முன்பட உரைத்த தன்மையின், அல்லோ, முழுவதும் நாடு ஒழிந்து
                                       அல்லால்,
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை?" என அதிட்டனும்
                                       கூற,
"மல் பட நிமலன் செய் அருள் தன்னால், வரும் பகை, திரு நலம்
                                       பயத்தல்
நல் பட அருளிக் கேண்மின் நீர்" என்ன நறு மலர் உயர்த்தனன்
                                       நவின்றான்.

     "முன் நான் சொல்லியதுபோல், நாட்டை விட்டு அறவே
நீங்கியல்லாமல், ஒளி பொருந்த வாழ்ந்து புண்ணிய வளம் பெறல் என்பது
அரிய செயலே அல்லவா?" என்று அதிட்டனும் கூறினான், கூறவே, "வரும்
பகை, ஆண்டவன் வல்லமையோடு செய்யும் அருளின் துணையால் செல்வ
நலத்தைத் தருதல் பற்றியும் நீவிர் நலம் பெறும் வண்ணம் அருள்கூர்ந்து
கேளுங்கள்" என்று நறுமண மலர்க்கொடியைத் தாங்கியவனாகிய சூசை
பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்:

     அதிட்டன் முன் கூறியது 23-ம் பாடல் காண்க.