பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்405

     "ஒளியுள்ள ஞாயிறு கடலில் மறைந்து மீண்டும் தன் தேரில் எழுந்து
விளங்கும் தன்மைபோல், அடைக்கப்பட்ட சிறையில் தான் நெடு நாள்
இருந்தும், இங்கு அழகு பொதிந்த இச்சித்திரத்திற் காண்பது போல், அவன்
கருமேகத்தினிடையே புதைத்த மின்னல் போன்று எழுச்சியுடன்
விளங்குவதைப் பாருங்கள்!


              86
மன்ன னன்றும னங்கெடக் கண்டவை
சொன்ன தன்மையிற் றொல்லுரை நூலினர்
தன்ன மைச்சர்த போதனர் கேள்விய
ரின்ன தென்றுகண் டெய்தில ராயினார்.
 
"மன்னன் அன்று மனம் கெடக் கண்டவை
சொன்ன தன்மையின், தொல் உரை நூலினர்,
தன் அமைச்சர், தபோதனர், கேள்வியர்
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார்.

     "எசித்து மன்னன் ஒரு நாளன்று தன் மனம் சோருமாறு கண்ட
கனவுகளைச் சொன்ன விடத்து. பழமையான கனவு நூலால் உரைப்போரும்,
தன் அமைச்சரும், முனிவரும், நூல்களைக் கேட்டறிந்தோரும் எல்லாம்,
அவற்றின் பொருள் இன்னதென்று கண்டு முடிவுக்கு வர இயலாதவர்
ஆயினர்.

     கண்டவை கனவு எனக் குறிப்பாய் உணர்க, உணரவே, நூல் என்றது
கனவு நூலெனக் கொள்க. 'தொல் உரை நூலினர்' என்பதனை, 'தொல் நூல்
உரையினர்' என மாற்றிப் பொருள் கொள்க.

               87
குலைய மன்னவ னூற்குர வர்தமின்
மலைய முன்சிறை வைகிய மைக்குணன்
கலைய திந்தென வாணரன் கண்டறிந்
துலைய வேண்டில வென்றுமற்
                      றோதினான்.
 
"குலைய மன்னவன், நூல் குரவர் தமின்
மலைய, முன் சிறை வைகிய மைக்குணன்,
'கலை அது இந்து என, ஆணரன் கண்டு அறிந்து,
உலைய வேண்டு இல' என்று, மற்று ஓதினான்.