பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்408

               92
பொழுதெ லாந்தனக் கோர்பொழு தாயெலாம்
பழுதி லாவுண ரும்பர நாதன்செய்
வழுதி லாத்தெரு ளால்வகுப் பேனெனாத்
தொழுத வாணரன் பின்னிவை சொற்றினான்.
 
"'பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய், எலாம்
பழுது இலா உணர் உம்பர நாதன் செய்
வழுது இலாத் தெருளால், வகுப்பேன்' எனாத்
தொழுத ஆணரன், பின் இவை சொற்றினான்:

     "இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் காலங்களெல்லாம் தனக்கு ஒரே
காலம்போல், அவற்றையெல்லாம் குற்றமற உணரும் வானுலக நாதன்
வழங்கும் தவறில்லாத தெளிவின் துணையால், இக்கனவுகளின் பயனெல்லாம்
வகுத்துச் சொல்வேன்' என்று மன்னனைத் தொழுத ஆணரன், பின்
இவற்றைச் சொல்லினான்:

     'வழு' - தவறு: இங்கு, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'வழுது' என
நின்றது.

               93
பருத்த தென்றுமுன் பார்த்தவே ழாவெனிற்
கருத்த கும்புயல் காலம்பொய் யாமையா
லுருத்த காவிளை வோங்கியே ழாண்டொரு
வருத்த மின்றியும் வாழுமிந் நாடன்றோ.
 
"'பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில்
கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால்,
உருத்த கா விளைவு ஓங்கி, ஏழ் ஆண்டு ஒரு
வருத்தம் இன்றியும் வாழும் இந்நாடு அன்றோ.

     "பருத்தது என்று முதல் கனவில் பார்த்த ஏழு பசு எக்கருத்ததோ
எனில், தகுந்தவாறு கருக்கொண்ட மேகம் காலத்து மழை பொழியத்
தவறாமையால், உருவழகு கொண்ட காடெல்லாம் விளைச்சல் மிகுந்து,
இந்நாடு ஏழாண்டுகள் ஒரு வருத்தமுமின்றி வாழும்.

     'அன்றோ' அசைநிலை, 'வருத்தம் இன்றியும்' என்பதன் உம்மையைப்
பிரித்து, 'வருத்தமும் இன்றி' என மாற்றிக் கூட்டுக.