|
| 94 |
மெலிவொ
டுற்றபின் னேழ்நிரை வேய்ந்துதா
மலிவொ டுற்றமுன் னேழ்நிரை மாந்தலாற்
பொலிவொ டுற்றவே ழாண்டுள பூரியைக்
கலியொ டுற்றவே ழாண்டுக றிக்குமால். |
| |
"'மெலிவொடு
உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து, தாம்
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால்,
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியைக்
கலியொடு உற்ற ஏழ் ஆண்டு கறிக்கும் ஆல். |
"'மெலிவோடு
பின் வந்துற்ற ஏழு பசுக்கள் சிறந்து, செழுமையோடு
முன் வந்துற்ற ஏழு பசுக்களை உண்டுவிட்டமையால், செழுமையோடு
அமைந்த ஏழாண்டுகளாய்த் திரட்டிய செல்வத்தையெல்லாம் பஞ்சத்தோடு
வந்து சேர்ந்த ஏழாண்டுகள் உண்டு தீர்க்கும்.
நிரை - மந்தை:
இங்கு முதலாகு பெயராய், அதன் சினையாகிய
பசுவைக் குறித்தது. ஆல் - அசைநிலை.
| 95 |
கண்ட தெண்ணிக்க
ளங்கமற் றாற்றலே
மண்ட வண்மையின் மன்னரி யல்பரோ
வண்ட மன்னன ளித்தவிக் காட்சியைக்
கொண்ட தன்மையிற் கோதற வாண்மினே. |
| |
"'கண்டது எண்ணி,
களங்கம் அற்று ஆற்றலே
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ;
அண்ட மன்னன் அளித்த இக் காட்சியைக்
கொண்ட தன்மையின், கோதுஅற ஆள்மினே. |
"'அறியக் கண்டதை
ஆராய்ந்து பார்த்து, அதற்குக் களங்கம் வரா
வண்ணம் செயலாற்றுதலே ஆட்சி வளத்தில் மன்னர் அணுகத்தக்க முறை
ஆகும்; வானுலக மன்னனாகிய ஆண்டவனே தந்த இக் கனவுக் காட்சியின்
பொருளை அறிந்து கொண்ட தன்மைக்கேற்ப நடந்து, குற்றமற ஆள்வாயாக.
'அரோ'
அசைநிலை. 'ஆள்மின்' என்றவிடத்து, 'மின்' ஈறு ஒருமைக்கு
வந்தது புதிய மரபு.
|