பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்41

"துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள்
                                மொய்த்து, ஆடாக்
கைச் சிறை கடக்கல் தேற்றாகால் சிறை ஆகி, எங்கும்
மெய்ச் சிறை பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக,
மைச் சிறை பட்ட நாடு, மறச் சிறை நரகு ஒத்து ஆம் ஆல்.

     "இழிந்த மன்னனின் உள்ளத்தைப் போன்று, அள்ளிக் கொள்ளத்
தக்க குவியல் போல இருள் மொய்த்து, ஆடாத கையால் அச்சிறையைக்
கடக்க மாட்டாமல், காலும் சிறைக்கு உள்ளாகி, எங்கும் தம் உடம்பு
சிறைப்பட்டுக் கிடந்த யாவரும் அஞ்சிக் கூக்குரலிட்டு அலறி நோகவே,
இருளினால் சிறைப்பட்ட அந்நாடு, பாவத்தின் சிறைக்கூடமாகிய நரகத்தை
ஒத்துத் தோன்றும்.

              விடுதலை தந்த பத்தாம் வாதனை

     - விளம், -மா, -விளம், -மா, -விளம், -விளம், -மா

                     38
அங்கடைக் கலமா யடைந்தவ ராளென் றாக்கிய கொடுவினை
                                        மாறாப்
பங்கடை கொடிய வேந்தனைத் தணிப்பப் படியுள வேந்தராள்
                                        பரமன்
வெங்கறை நீக முண்ணிக ளீக்கள் விலங்கினோய் குட்டநோ
                                        யாலி
சங்கடை பதங்க மல்கிரு ளென்னுஞ் சபித்ததோர் சாபமொன்
                                        பதுவே.
 
"அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு
                                       வினை மாறாப்
பங்கு அடை கொடிய வேந்தனைத் தணிப்ப, படி உள வேந்தர் ஆள்
                                           பரமன்,
வெங் கறை, நீகம், உண்ணிகள், ஈக்கள், விலங்கின் நோய், குட்ட
                                       நோய், ஆலி,
சங்கு அடை பதங்கம், மல்கு இருள் என்னும், சபித்தது ஓர் சாபம்,
                                       ஒன்பதுவே.

     "அங்கு அடைக்கலமாய் வந்தடைந்த யூதர்களை அடிமைகளென்று
ஆக்கிய கொடுஞ் செயல் மாறாத பாவம் நிறைந்த கொடிய எசித்து
மன்னனைப் பணிவிக்கும் பொருட்டு, உலகத்திலுள்ள மன்னரையெல்லாம்
ஆளும் மன்னனாகிய ஆண்டவன், சபித்துத் தந்த ஒப்பற்ற சாபங்கள்,
வெப்பமான இரத்தம், தவளை, உண்ணிகள், ஈக்கள், விலங்குகளுக்கு
நேர்ந்த நோய்' மனிதர்க்குக் குட்ட நோய், ஆலங்கட்டி மழை, கூட்டமாக
வந்து சேரும் வெட்டுக் கிளிகள், செறிந்த இருள் என்னும் ஒன்பதும் ஆகும்.