பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்414

எல்லா உயிர்களையும் முறையாகப் பேணி, நிலம் விளைந்து தரும்
இனிய பண்டங்களுள் உண்டு எஞ்சி நின்றதையெல்லாம் ஏழாண்டுகளாகச்
சேர்த்து வைத்தான்.


                    102
பால்கலந் துணுமே ழாண்டாய்ப் பசியுயி ருணுங்கா லாகிக்
கால்கலந் தொழுகு மாரி கான்றவோர் துளியு மின்றி
நூல்கலந் துரைத்த வண்ண நொந்துயி ரெவையு மெஞ்சச்
சேல்கலந் திழிநீர் நாட்டிற் சேர்த்தவை வகுத்தல் செய்தான்.
 
"பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய், பசி உயிர் உணும்
                                            கால் ஆகி,
கால் கலந்து ஒழுகும் மாரி கான்ற ஓர் துளியும் இன்றி,
நூல் கலந்து உரைத்த வண்ணம், நொந்து உயிர் எவையும் எஞ்ச,
சேல் கலந்து இழி நீர் நாட்டில், சேர்த்தவை வகுத்தல் செய்தான்.

     "தான்முன் தெய்வ நூல் அடிப்படையில் சொல்லியபடி, பாலும்
கலந்தே உண்ணும் செழுமையான ஏழாண்டுகள் கடந்து, மீனோடு கலந்து
ஓடும் நீர்வளம் மிக்க அதே நாட்டில், காற்றோடு கலந்து பொழியும்
மழைபெய்த துளி ஒன்றும் இன்றி, பசி உயிரையே உண்ணும் பஞ்ச காலம்
வந்து, உயிர்களெல்லாம் நொந்து மெலியவே, தான் அவ்வாறு சேர்த்து
வைத்தவற்றைப் பகிர்ந்தளித்துக் காத்தான்.

                ஆணரனும் அண்ணன்மாரும்

                    103
பார்முழு துண்ணுங் கூர்த்த பசிதனை யுண்ணு மன்னான்
சீர்முழு தகன்ற வன்பிற் சிறப்புற வளித்த நாடே
சூர்முழு தழுங்கு மற்றத் தொலைத்தந டுய்ய வெய்தித்
தார்முழு திலங்கு மார்பன் றமையராங் கிருவ ருற்றார்.