பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்416

     "வந்தடைந்த அவர்களை ஆணரன் கண்டதும் தமையரென்று
தானே உணர்ந்து இருந்து, மற்ற அவர்கள் தன்னை இன்னானென்று
உணர்ந்து கொள்ளாமையை மதித்து அறிந்தான்; 'யார் நீங்கள்? உங்களைப்
பெற்றவர் யாவர்? எது உங்கள் நாடு? மொத்தம் உடன்பிறப்பு எத்தனை?
என்று வினவ, அவனை முன் விற்ற தமையர் அது கேட்டுக் கால்களை
வணங்க வீழ்ந்து கிடக்க, அவர்களுள் ஒருவன் பின்வருமாறு சொன்னான்.

     'கண்டு உணர்ந்து' என முன் பின்னாகக் கூட்டுக. 'உற்றவர்' -
உறவினர்: தமையர் என்று கொள்ளலும் பொருந்தும்.

                      105
எற்கொண்ட கனய நாட்டி லியூதர்நா மியாக்கோ பென்பான்
முற்கொண்ட குழலா ளீன்ற முளைகளீ ரைந்து மானோம்
பிற்கொண்ட நல்லா டந்த பிள்ளையொன் றகன்றான் பின்னர்
விற்கொண்ட தரள மொப்ப மீளவொன் றுதித்த தென்றான்.
 
"'எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம். யாக்கோபு என்பான்
முன் கொண்ட குழலாள் ஈன்ற முளைகள் ஈர் ஐந்தும் ஆனோம்,
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான்; பின்னர்.
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது' என்றான்.

     "'ஒளி பொருந்திய கனய நாட்டிலுள்ள யூதர் நாங்கள், யாக்கோபு
என்பவன் முதலில் மணந்து கொண்ட கூந்தல் அழகுள்ள மனையாள் பெற்ற
பிள்ளைகள் நாங்கள் பதின்மர் ஆயினோம். அவன்பின் மணந்துகொண்ட
நல்ல மனையாள் தந்த பிள்ளை ஒருவன் காணாமற் போனான்; மேலும்,
ஒளிபொருந்திய முத்துப்போல அவனுக்குப்பின் மீண்டும் பிறந்ததும் ஒன்று
உண்டு' என்றான்.

     'அவன் போன பின்பு விளங்கிய முத்துப் போல வேறே பிள்ளை
பிறந்தது என்ற பழைய உரை வரலாற்றோடும், தொழுத பதினொரு விண்மீன்
தொகையோடும் பொருந்தாமை காண்க. செய்யுளின் சொற்போக்கு அவ்வாறு
கொள்ள நிற்பதும் மறுக்கத்தக்கதன்று. 'நாட்டிலியூதர்', 'நாமியாக் கோபு'
என்ற இடமெல்லாம் இடையே நின்ற இகரம் தன்னொழி மெய்முன் யகரம்
வர வந்த இகரமென அறிக. குழலாள், நல்லாள் என்ற பெயர்கள் சினையும்
குணமும் கருதாது, பெண் என்னும் பொருளளவில் நின்றன எனவும்
கொள்ளலாம்.