பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்417

                   106
இனையன கேட்டுத் தன்னை யீன்றனள் பின்ன ரீன்ற
தனையனைக் காண்டல் வெஃகித் தந்தபின் மகன்வந் தல்லா
லுனையன நாட்டிற் போக்கே னுணவினி யளியே னென்னா
வனையன செல்வன் கூறி யழுங்கிமற் றொருவன் போனான்.
 
"இனையன கேட்டு, தன்னை ஈன்றனள் பின்னர் ஈன்ற
தனையனைக் காண்டல் வெஃகி, 'தந்த பின்மகன் வந்து அல்லால்
உனை அன நாட்டில் போக்கேன்; உணவு இனி
                                        அளியேன்' என்னா
அனையன செல்வன் கூறி, அழுங்கி மற்று ஒருவன் போனான்.

     "ஆட்சிச் செல்வனாகிய ஆணரன் இவற்றையெல்லாம் கேட்டு,
தன்னைப் பெற்ற தாய் தனக்குப் பின் பெற்ற மகனைக் காண விரும்பி,
'அத்தாய் பின் பெற்றுத் தந்த மகன் வந்தாலன்றி, உன்னை
அந்நாட்டிற்குச்செல்ல விடமாட்டேன்; உணவும் இனிமேல் கொடுக்க
மாட்டேன்' என்ற அவ்விதம் கூறவே, மற்ற ஒருவன் வருத்தத்தோடு
திரும்பிப் போனான்.

     'இனி அளியேன்' என்றதனால், அப்போது கொடுத்து விட்டமை
பெறப்படும். 'தனயன்' என்ற சொல், 'தனையன்' என எதுகை நோக்கித்
திரிந்தது.

                       107
வெறிபட்டார் மதுவி னாட்டில் விளைந்தநோய் கேட்ட தந்தை
பொறி பட்டா லலர்பூ நையும் போலுள மழுங்க வாடி,
மறிபட்டான் மீட்க வேண்டு மறுவுண வடைய வைவேல்
எறிபட்டா ருயிர்பேர்ந் தென்ன விளமகன் போத லென்றான்