பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்424

     "தழுவிய ஆணரன், 'நீங்கள் தீமை விதைத்த நிலமே செல்வத் தன்மை
எனக்கு விளைவித்துள்ளது அல்லவா? பூந்தாதோடு கூடிய தேனாகிய நீரைப்
பொழியும் மரம் தன்னை வெட்டு வார்க்கும் நிழல் தருதல் போல் நீங்கள்
எனக்குத் தீங்கு கருதிய வண்ணம், நான் உங்களுக்குத் தீங்கு செய்யக்
கருதமாட்டேன், அதனால், நீங்கள் ஒரு சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை;
உடன் பிறந்தார் என்ற இயல்புக்கு ஏற்ப நான் உங்களைக் காப்பேன்'
என்றான்.


                   117
தூம்புடைத் தடக்கை மாவுந் துரகமுந் தசமுஞ் சாடுங்
கூம்புடைக் கொடிஞ்சித் தேருங் கொடிகுடை பலவும் போக்கி
வீம்புடைப் புலமை நீரான் விளித்ததாய் தாதை தந்தாள்
தேம்புடைக் கண்ணி சாற்றித் தெண்டனிட் டுவப்பச் செய்தான்.
 
"தூம்பு உடைத் தடக் கை மாவும், துரகமும், தசமும், சாடும்,
கூம்பு உடைக் கொடிஞ்சித் தேரும், கொடி, குடை, பலவும் போக்கி,
வீம்பு உடைப் புலமை நீரான், விளித்த தாய் தாதை தம் தாள்
தேம் புடைக் கண்ணி சாற்றி, தெண்டனிட்டு, உவப்பச் செய்தான்.

     "மேன்மை வாய்ந்த அறிவுப் புலமையை இயல்பாகக் கொண்டுள்ள
ஆணரன், உள்ளே துளை கொண்ட பெரிய துதிக்கை உடைய யானைகளும்,
குதிரைகளும், பல்லக்குகளும், வண்டிகளும் கூம்பிய உச்சியில் தேர்மொட்டுக்
கொண்டுள்ள தேர்களும், கொடிகளும், குடைகளும், வேறு பலவும் அனுப்பி,
தன்னிடத்து அழைத்து வந்த தாய் தந்தையர் அடிகளில் தேனைப்
பக்கமெல்லாம் பொழியும் மாலைகளைச் சார்த்தி, தெண்டனிட்டு வணங்கி,
அவர்களை மகிழ்வித்தான்.

     'கூம்புடைக் கொடிஞ்சித் தேரும்' என்ற பகுதிக்கு, "மொட்டுயர்ந்த
கொடிஞ்சித் தேர்களும்" என்று பழைய உரையாசிரியர் உரை
கொண்டுள்ளார். 'தேன் புடை' என்பது, 'தேம் புடை' என எதுகை
நோக்கித் திரிந்தது. அதுவே புணர்ச்சி விகாரமெனக் கொள்ளினும்
அமையும். 'சாற்றுதல்' இங்குச் 'சார்த்துதல்' என்ற சொல்லின் போலி.