பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்428

     "வான் வீட்டை அடைய வேண்டின், நீ விதித்த வேத நூலே பயன்
தருவதாம். அல்லாமல், நாட்டை விட்டுக் காட்டில் வந்து ஒளித்தலும்,
குளத்தில் குளித்தலும், நெடுங் காலமாய் விழுந்து தொங்குமாறு சடையை
வளர்த்து நீட்டுதலும், மற்றவையும் மாண்புபெறப் பயன்படா அறிவின்மை
ஆகும்" என்பர்.


               124
சடைவள ருருக்கொடு தவிர்கி னீர்குளித்
தடைவளர் வனத்திடை யகன்றி லாதிரிந்
திடைவளர் கனிகளோ டிளங்கி ழங்குணு
முடைவளர் கரடிகள் முனிவ ரோவென்பார்.
 
"சடை வளர் உருக் கொடு, தவிர்கு இல் நீர் குளித்து,
அடை வளர் வனத்திடை அகன்று இலா திரிந்து,
இடைவளர் கனிகளோடு இளங் கிழங்கு உணும்
முடை வளர் கரடிகள், முனிவரோ?" என்பார்.

     "சடை வளர்த்த உருவம் கொண்டிருந்து, தவறாமல் நீரில் குளித்து,
இலைகள் தழைத்து வளரும் காட்டை விட்டு அகலாமல் அங்கேயே
திரிந்து, அக்காட்டில் வளரும் கனிகளோடு இளங் கிழங்குகளையே
உண்ணும் முடை நாற்றமடிக்கும் கரடிகள், இக்காரணங்களால் முனிவர்
எனத் தகுமோ?" என்பர்.

                125
சுரத்திடைத் தழலொடு துறும்பு றாக்களு
மரத்திடைத் தூங்கிநற் கனியுண் வாவலு
முரத்திடைத் துறவரோ வுளத்தின் மாண்பலாற்
பரத்திடைக் கிளர்வினை பரியு மோவென்பார்.
 
"சுரத்திடைத் தழலொடு துறும் புறாக்களும்,
மரத்திடைத் தூங்கி நல் கனி உண் வாவலும்
உரத்திடைத் துறவரோ? உளத்தின் மாண்பு அலால்,
பரத்திடைக் கிளர் வினை பரியுமோ?" என்பார்.

     "பாலைவனத்தில் நெருப்புப் போன்ற வெயிலோடு தங்கியிருக்கும்
புறாக்களும், மரங்களில் தலைகீழாய்த் தொங்கி நல்ல கனிகளை மட்டுமே
உண்ணும் வௌவால்களும் மன உரத்தோடு கூடிய துறவியர் எனத்
தகுமோ? உள்ளத்தின் மாண்பே அல்லாமல், புறக்கோலமெல்லாம்,
பாரமாகக் கிளர்ந்துள்ள பாவ வினைகளை அறுத்தொழிக்குமோ?" என்பர்.