பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்430

     'அடா' என்பது, விளி கருதாது, பேச்சுத் துணைச் சொல்லாய்
நின்றது. "கொக்கு இறகு அணிந்தும், அக்குமணி வடம் தரித்தும், பீலிப்
பிச்சம் ஏந்தியும், நீறு பூசியும், சடையை வளர்த்தும், மற்றப் பல
முறையோடு பல கோலங்கள்" எனப் பழைய உரை கோலத்தை விரித்துக்
காட்டும். இப்பாட்டின் கருத்தை 27 : 130 - 131-இலும் காண்க.

              128
புரைவளர் பகைநமைப் புழுங்கிப் போரெழ
விரைவளர் வனத்திலும் வினைசெய் துட்சுடுங்
கரைவளர் கடற்கணுங் கலக்க மில்லதால்
நிரைவள ருளத்தருள் நிறைந்த காலென்பார்.
 
"புரை வளர் பகை நமைப் புழுங்கிப் போர் எழ,
விரை வளர் வனத்திலும் வினை செய்து, உள் சுடும்.
கரை வளர் கடற்கணும் கலக்கம் இல்லது ஆல்,
நிறை வளர் உளத்து அருள் நிறைந்த கால்" என்பார்.

     "பாவத்தால் வளரும் பகை நம்மைச் சினந்து போருக்கு எழுங்
காலத்து, மணம் நிறைந்த சோலையிலும் தீவினையே செய்வித்து, நமது
உள்ளத்தைச் சுடும். முறையாக அறத்தில் வளரும் உள்ளத்தில் இறைவன்
அருளும் கூடி நிறைந்த காலத்து, கரைக்குள் பொங்கி நிற்கும் கடலின்
உள்ளேயும் கலகத்திற்கு இடமில்லை" என்பர்.

     'ஆல்' அசைநிலை.

                129
பன்னெறி யிசைத்தசொற் பயன்கண் டேவளன்
முன்னெறி யொழிந்தவம் முனிவர் யாவரு
நன்னெறி யடைந்தன நயப்பிற் கோதறு
மன்னெறி யுறுதிகள் வகுத்துக் காட்டினான்.
 
பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே, வளன்,
முன் நெறி ஒழிந்த அம் முனிவர் யாவரும்
நல் நெறி அடைந்தன நயப்பின், கோது அறு
மன் நெறி உறுதிகள் வகுத்துக் காட்டினான்.