பொய் செல,
செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல,
மை செல, செல்லும் வாரி மருளி வந்து, அளவின் பொங்கி,
மெய் செலச் செல்லும் நன்று ஒத்து, எக் கணும் விளைவு
உய்த்து ஓடி,
பை செலச் செல்லும் நாகப் பரிசு என, செல்லும் ஆறே. |
பொய் ஒருவன்
வாயினின்று வெளிப்பட்டு, பின் தொடர்ந்து செல்லும்
வாய்களின் மூலமாய்ப் பொலிவோடு பெருகுதல் போல, மேகம் பொழிந்து
செல்வதனால், நீர் பெருகிச் செல்லும் சிற்றாறுகள் தன்னோடு வந்து கலந்து,
அதனால் தன் இயல்பான அளவினும் வெள்ளம் பொங்கி, மெய்
சென்றவிடமெல்லாம் விளையும் நன்மையைப் போன்று, தான்
செல்லுமிடமெல்லாம் விளைச்சற் பயனைத் தந்து ஒடி, படத்தை விரித்துச்
செல்லும் நாகப் பாம்பின் தன்மையாக, அந்த ஆறு வளைந்து செல்லும்.
3 |
விரைவளர்
மலர்விள் சோலை வெயிலற நிழற்றிக் கவ்வுங்
கரைவளர் புனலைக் காட்டிக் கபிரியேல் தொழுது கூற
வரைவளர் மாடத் தேந்தல் வைகுமா புரங்கண் ணோடித்
திரைவளர் மணியும் பொன்னுஞ் சிந்துகை யாறி தென்றான். |
|
விரை வளர் மலர்
விள் சோலை வெயில் அற நிழற்றிக் கவ்வும்
கரை வளர் புனலைக் காட்டி, கபிரியேல் தொழுது, கூற
"வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஒடி,
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது" என்றான். |
அப்பொழுது, கபிரியேல்
என்னும் வானவன் அவர்களைத் தொழுது,
மணம் பெருகும் மலர்கள் விரியும் சோலைகள் வெயில் படாதவாறு நிழல்
தந்து கவ்வி நிற்கும் இரு கரைகளிடையே பெருகியோடும் அவ்வாற்றைக்
காட்டி, சொல்ல முற்பட்டு, "மலை போல் வளர்ந்த மாளிகையில் எசித்து
மன்னன் வாழும் பெருநகரின் பக்கமாக ஓடி, தன் திரைகளிடையே வளரும்
மணியையும் பொன்னையும் கரைகளிற் கொழிக்கும் கையாறு எனப்படுவது
இது" என்று, பின்னும் தொடர்ந்து செல்வான்.
'கையாறு'
என்பது, காரணப் பெயராகுமாறு, பின் 13ஆம் பாடலிற்
காண்க. 'நீல நதி' எனவும் வழங்கும் 'நைல்' என்பது அதன் இயற்பெயர்
என அறிக.
|