"தாள் எழும்
கமலம் நீரில் தளம்பியது என்றோ, முத்தம்
பீள் எழும் சங்கம் என்றோ, பேழை மேல் அலைந்து போகில்,
தூள் எழும் புரத்தின் கண்ணே, தூர் எழு நாணல் மாட்டி,
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான். |
"தண்டில் எழுந்து
நிற்கும் தாமரை மலர் நீரில் அசைந்தாடியது
என்றோ, முத்தத்தைக் கருப்பத்தே கொண்டு எழும் சங்கு என்றோ
சொல்லத் தக்கவாறு, நீர்மேல் அப்பேழை அலைந்து செல்கையில், தூள்
பறக்கும் அரச நகரத்தின் பக்கத்தே, தூரோடு எழுந்து நின்ற நாணலில்
அப் பேழை மாட்டிக் கொள்ளவே, வாள் போன்ற கண் கொண்ட
அத்தாய் பெற்ற அழகிய நல்ல குழந்தை அவ்விடத்துத் தங்கி நின்றான்.
அரச நகரில்
தூள் எழுதல், மாந்தரும் விலங்குகளும் வண்டிகளும்
மிகுதியாகத் தெருக்களில் போதல் வருதலால், 'கண்ணினான்' என்பது
'கணினான்' என வந்தது இடைக்குறை.
8 |
அன்றொளித்
திங்க ணாண வங்கதிர் முகத்து நல்லாள்
குன்றொளித் திடுந்திண் டோளிற் கோனினி தீன்ற கோதை
சென்றொளித் திரையை மாதர் திரளினோ டிமிழி லாட
நின்றொளித் திருந்த பேழை நிமிர்ந்துகண் டெடுமி னென்றாள். |
|
"அன்று, ஒளித்
திங்கள் நாண அம் கதிர் முகத்து நல்லாள்,
குன்று ஒளித்திடும் திண் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை
சென்று, ஒளித் திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட,
நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு, 'எடுமின்' என்றாள். |
"அதே நாளில்,
ஒளி பொருந்திய மதி நாணத் தக்க அழகிய கதிர்
வீசும் முகங் கொண்ட நல்லவளும், குன்று அஞ்சி ஒளிக்கத் தக்க
உறுதியான தோள் கொண்ட எசித்து மன்னன் இனிதே பெற்ற மாலை
போன்றவளுமாகிய அம்மகள் அவ்வாற்றிற்குச் சென்று, ஒளி பொருந்திய
அதன் திரைகளிடையே தன் தோழிப் பெண்கள் திரளோடு இன்பமாய்
ஆடிக் கொண்டிருக்கையில், நாணலிடையே நின்று மறைந்திருந்த
பேழையை நிமிர்ந்து நோக்கி, 'அதனை எடுத்து வாருங்கள்' என்றாள்.
|