பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்438

                      9
எடுத்தமஞ் சிகத்து நோக்கி யிளமதி முகத்திற் றண்ணீர்
விடுத்தபைம் பனியோ கஞ்சம் விள்முகத் துதிர்த்த முத்தோ
கடுத்ததுன் பாற்றா கண்ணீர் கான்றகால் முகத்தைக் கண்டு
தொடுத்ததன் னணிகள் பெய்தென் றோன்றலென் றரசி                                       கொண்டாள்.
 
"எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி, இள மதி முகத்தில் தண்ணீர்
விடுத்த பைம் பனியோ, கஞ்சம் விள் முகத்து உதிர்த்த முத்தோ,
கடுத்த துன்பு ஆற்றா, கண்ணீர் கான்ற கால், முகத்தைக் கண்டு,
தொடுத்த தன் அணிகள் பெய்து, 'என் தோன்றல்' என்று, அரசி                                       கொண்டாள்.

     "தோழியர் எடுத்த பேழையினுள் இளவரசி நோக்கி, அக்குழந்தை
தன் பெருந் துன்பத்தைத் தாங்கமாட்டாமல் கண்ணீர் பொழிந்த போது,
இளம் பிறை போன்ற ஒளி முகத்தின் தண்ணீராக விழுந்த பசுமையான
பனியோ, தாமரை விரியுங் காலத்து உதிர்த்த முத்தோ என்ற மதிக்கத்தக்க
அம் முகத்தைக் கண்டு, தான் அணிந்திருந்த அணிகலன்களைக் கழற்றி
அதற்கு இட்டு, 'இவன் என் மகன்' என்று ஏற்றுக் கொண்டாள்.

     'அரசி' என்றாரேனும், முன் 'கோன் இனிது ஈன்ற கோதை'
என்றமையால், இளவரசி எனக் கொள்க.

                    10
பானல முலையி னாளைப் பாலனுக் கழைமி னென்னாத்
தானல மாடத் தெய்தித் தையலார் கமழ்நீ ராட்டிச்
சேநல மெழப் பொன் னாழி சிலம்புகிண் கிணிகள் பூட்டி
மீனல மணிந்த நாகு விதுவெனத் தோன்றி னானே.
 
"'பால் நல முலையினாளைப் பாலனுக்கு அழைமின்' என்னா,
தான் நல மாடத்து எய்தி, தையலார் கமழ் நீர் ஆட்டி,
சே நலம் எழப் பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி
மீன் நலம் அணிந்த நாகு விது எனத் தோன்றினானே.