பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்440

"வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து, மோயிசன்
                                     என்று ஓதி,
தளர்ந்த தன் குலத்தை ஓம்பத் தற்பரன் பணிப்ப, அங்கண்
உளர்ந்த பல் முயற்சி யாவும் ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே?
கிளர்ந்த நல் அறிவினோர்க்குக் கிளர்க்க நான்
                                    உரைப்பது என்னோ?

     "அவன் வளர்ந்த வெண்ணிற திங்கள் போல் அங்கு வளர்ந்தான்;
மோயிசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான், பின், அடிமை நிலையால்
தளர்ந்த தன் குலத்தைப் பேணுமாறு ஆண்டவன் கட்டளையிடவே, அங்கு
அவன் நடத்திய பல காரியங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக நீங்களே
அறிவீர்கள் அல்லவா? நிறைந்த நல்லறிவு படைத்தோருக்கு எழுச்சி
பெறுமாறு நான் மேலும் சொல்லக்கிடந்தது என்ன?

                      13
ஐயெடுத் தொளிரத் தோன்றற் கன்பெடுத் துயிரைக் காக்கக்
கையெடுத் தளித்த தென்றிக் கங்கையைக் கையா றென்னு
மெய்யெடுத் திசைத்த நாம விதியிதே யென்றான் வானோன்
மையெடுத் திரைத்த யாறு வலத்திலிட் டவரும் போனார்.
 
"ஐ எடுத்து ஒளிர் அத் தோன்றற்கு அன்பு எடுத்து,
                                             உயிரைக் காக்கக்
கை எடுத்து அளித்தது என்று, இக் கங்கையைக் கையாறு என்னும்;
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே" என்றான் வானோன்.
மை எடுத்து இரத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார்.

      "அழகு கொண்டு ஒளிர்ந்த அம் மகனுக்கு அன்பு பூண்டு,
அவனது உயிரைக் காக்கத் தன் திரையாகிய கையால் எடுத்து வந்து
காத்தது என்பதைக் கருதி, இவ்வாற்றைக் கையாறு என்று அழைப்பர்.
உண்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இப் பெயர் வந்த
முறை இதுவாகும்" என்றான் கபிரியேல் என்னும் வானவன். கருமை
நிறத்தோடு இரைந்து சென்ற அவ்வாற்றை வலப் பக்கமாக விட்டுத் திருக்
குடும்பத்தினர் மேலும் தொடர்ந்து சென்றனர்.