பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்449

                  29
பறைசிந்தின வொலிசிந்தின பகைசிந்தின பறவை
நறைசிந்தின மலர்சிந்தின நனைசிந்தின நறுதே
னுறைசிந்தின விதழ்சிந்தின வுயர்சிந்தின வுணுநீர்
முறைசிந்தின முனைசிந்தனை முயல்சிந்திட முடியா.
 
பறை சிந்தின ஒலி சிந்தின பகை சிந்தின பறவை;
நறை சிந்தின மலர் சிந்தின; நனை சிந்தன; நறு தேன்
உறை சிந்தின; இதழ் சிந்தின; உயர் சிந்தின உணும் நீர்;
முறை சிந்தின முனை சிந்தனை முயல் சிந்திட முடியா.

     தமக்குள் விளையாட்டுப் பகையைக் கொண்ட பறவைகள், பறை
ஒலித்தாற் போன்ற ஒலியைச் செய்தன; வாசனை பொழிந்த மலர்களைக்
கோதிச் சிதறின; பூவரும்புகளைச் சிதறின; நறு மணமுள்ள தேன் துளிகளைச்
சிந்தின; பூவிதழ்களைச் சிதறின, தான் உண்ணும் நீராகிய தேனை உயரத்துக்
கொப்பளித்துச் சிந்தின; இவ்வாறெல்லாம் முறைகெட்ட தன்மையாய்
விளையாட்டுப் போரிற் கொண்ட அவற்றின் சிந்தனை முயற்சிகள் சிதைந்து
முடிவு பெறமாட்டா.

                   30
வந்தோடிய வொருகோவன மதுவோடிய மலரின்
னந்தோடினி தலகோடது கவர்வாயின வளவின்
முந்தோடிய பெடைமீமிசை முருகார்துளி முடுகப்
பந்தோடியை மணநீர்களி மடவார்விடு படியே.
 
வந்து ஓடிய ஒரு கோ அனம், மது ஒடிய மலரின்
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில்,
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக,
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே.

     வந்து ஓடிய ஓர் அரச அன்னம், தேன் பாய்ந்தோடிய தாமரை
மலரின் அழகிய இதழைத் தன் அலகால் பறித்தெடுத்த பொழுது, தனக்கு
முன்னே ஓடிக் கொண்டிருந்த பெட்டை அன்னத்தின் உச்சிமீது மணம்
நிறைந்த தேன் துளி பாயவே அத் தோற்றம், துருத்தியோடு அமைந்த
மண நீரைக் களிப்புற்ற மகளிர் ஒருவர் மேல் ஒருவர் பாய்ச்சி விளையாடும்
தன்மையை ஒத்திருந்தது.