33 |
அளியாரல
ரரவேபட மனையாட்டின பலவுங்
களியால்விரி சிறையூடது கரவாற்றின பலவுந்
துளியார்முகி லுறமீவிசை துறவோட்டின பலவு
நளியாரலர் விளையாடின நயமெல்லையு
மிலையால். |
|
அளி ஆர் அலர்
அரவே படம் அனை ஆட்டின பலவும்,
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின பலவும்,
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஓட்டின பலவும்,
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை ஆல். |
வண்டுகள் நிறைந்த
மலர்களை அலகால் கொய்து பாம்பின் படம்
போல் ஆட்டிக் காட்டின பறவைகள் பலவும், களிப்பால் விரித்த தம்
சிறகுகளின் ஊடே அம்மலரை மறைத்து வைத்துக் கொண்ட பறவைகள்
பலவும், துளி நிறையக்கொண்ட மேகத்தைச் சென்று சேருமாறு மேலே
விசையாக அம்மலர்களை எறிந்த பறவைகள் பலவுமாக, குளிர்ச்சி நிறைந்த
மலர்களைக் கொண்டு அவை விளையாடின நயத்திற்கு எல்லையே இல்லை.
'ஆல்'
அசை நிலை.
34 |
மேனின்றொரு
நடநோக்கினர் விரிவண்புக
ழொலிபோல்
வானின்றகல் கரைசூழ்நிழன் மரமுந்திய பறவை
தேனின்றலர் சுனையாடின திறநோக்கிய களியாற்
பானின்றினி திசைபாடுளி புகழ்பாடின பரிசே. |
|
மேல் நின்று
ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ்
ஒலி போல்,
வான் நின்று, அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை,
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால்,
பால் நின்று இனிது இசை பாடு உளி, புகழ் பாடின பரிசே. |
ஒரு நடனத்தை
உயர்ந்த இடத்து நின்று நோக்கியவர் விரித்து
வளமாக அதனைப் புகழும் ஒலி போல், வானுற ஓங்கி நின்று அகன்ற
தடாகக் கரையைச் சூழ்ந்துள்ள நிழல் தரும் மரங்களின்மேல் ஏறி
அமர்ந்த பறவைகள், பூக்கள் தேன் நிறைந்து மலரும் தடாகத்தில்
இவ்வாறு நீர்ப்பறவைகள் ஆடிய திறத்தைக் கண்ட களிப்பினால், பால்
போன்று இனிதாகத் தாமும் இசை பாடியபோது, அவற்றின் புகழைப்
பாடிய தன்மையாகத் தோன்றும்.
|