பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்457

     'ஆல்' இங்கும், தொடர்ந்து வரும் பாடல்களிலும் அசை நிலை.

         5
ஈனந்தவி ரீரற மீரமருள்
ஞானந்தக வூக்கந யம்புகழ்சீர்
தானந்தவ நூல்பொரு டந்தனபின்
வானந் தரு வாழ்வுக வெய்தினரால்.
 
ஈனம் தவிர் ஈர் அறம், ஈரம், அருள்,
ஞானம், தகவு, ஊக்கம் நயம் புகழ் சீர்
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின்
வானம் தரு வாழ்வு உக எய்தினர் ஆல்.

     குறைபாடுகளைத் தவிர்க்கும் இல்லறமும் துறவறமுமாகிய இரண்டு
அறங்களும், இரக்கமும், கருணையும், ஞானமும், பெருமையும், ஊக்கமும்,
மகிழ்ச்சியும், புகழும், சிறப்பும், தானமும், தவமும், அறிவு நூலும்,
பொருளும் இவ்வுலகில் தந்த பின், வானம் தரும் மறுமை வாழ்வும்
பொழியுமாறு அவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

            6
கனைமஞ்சுபொ யாதுக யம்பொழிய
நனைவிள்வயல் நான்குப யன்விளைய
வினைநொந்தழ வெம்பகை நீங்கியழ
வனையாதவ ராங்கடி வைத்தனரால்.
 
கனை மஞ்சு, பொ யாது கயம், பொழிய,
நனை விள் வயல் நான்கு பயன் விளைய,
வினை நொந்து அழ, வெம் பகை நீங்கி அழ,
வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர் ஆல்.

     முழங்கும் மேகம் பொய்க்காமல் குளங்களில் பொழியவும், அரும்புகள்
விரியும் வயல்கள் ஆண்டிற்கு நான்கு பலன் தந்து விளையவும், தீவினை
தனக்கு அங்கு இடமில்லையென்று அழவும், கொடிய பகை அந்நாட்டை
நீங்கிச் சென்று அழவுமாக, உருவமாக வனையப்படாத தன்மையுள்ள
அம்மூவரும் அந் நாட்டில் தம் அடி வைத்தனர்.