9 |
கயல்பாய்ந்துக
ளக்கம லங்கிழிபட்
டயல்பாயொளி முத்தற லோடொழுகி
வயல்பாய்ந்துநெல் முத்தமொ டேமருளி
யியல்பாய்நில மின்புறி நக்கெனவே. |
|
கயல் பாய்ந்து
உகள, கமலம் கிழிபட்டு,
அயல் பாய் ஒளி முத்து அறலோடு ஒழுகி,
வயல் பாய்ந்து, நெல் முத்தமொடே மருளி,
இயல்பாய் நிலம் இன்பு உறி நக்கு எனவே. |
கயல் மீன்கள்
பாய்ந்து குதித்தலால், தாமரை மலர் கிழி பட்டு,
அதினின்று அயலிற் பாய்ந்து விழுந்த ஒளிகொண்ட முத்துக்கள் ஆற்று
நீரோடு ஓடிப்போய், வயலிற் பாய்ந்து, அங்குள்ள நெல் முத்துக்களோடு
கலந்து கிடந்து, நிலமகள் இன்பம் கொண்டு இயல்பாய்ச் சிரிப்பதுபோல்
தோன்றும்,
'தோன்றும்'
என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது.
10 |
கண்டாரெவ
ருங்கனி கண்வழியா
லுண்டார்நிறை யின்பமு ளத்திலெனத்
தண்டார்மிசை சாயளி மொய்த்தனபோன்
மண்டாரற வோர்மிசை மல்கியகண். |
|
கண்டார் எவரும்
கனி கண் வழியால்
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என,
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தனபோல்,
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண். |
இம்மூவரைக் கண்டவர்
யாவரும் தன் கனிந்த கண்கள் வழியாக
உள்ளத்தில் நிறைந்த இன்பத்தை உண்டனர். எனவே, குளிர்ந்த மலர்மாலை
மீது வண்டுகள் சாய்ந்து மொய்த்த தன்மையாக, அவர்கள் கண்களெல்லாம்
செறிந்து நிறைந்த அறத்தைப் பூண்ட அம்மூவர்மீது நெருங்கிக் கிடந்தன.
|