பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்460

              11
நீர்மேலெழு மாலிநெ டுங்கதிர்முன்
பார்மேலெழு நீளிருள் பட்டொழியுஞ்
சீர்மேலெழு மூவர்கள் சிந்தருளாற்
சூர்மேலெழு தீதுது டைத்தனரே.
 
நீர் மேல் எழு மாலி நெடுங் கதிர் முன்,
பார் மேல் எழு நீள் இருள் பட்டு ஒழியும்
சீர் மேல், எழு மூவர்கள், சிந்து அருளால்,
சூர் மேல் எழு தீது துடைத்தனரே.

     கடல் மீது எழுந்துவரும் பகலவனின் நெடிய கதிர்களின் முன், இம்
மண்ணுலகின் மீது எழுந்து மூடிய நீண்ட இருள் அழிந்து ஒழியும்
தன்மைக்கும் மேலாக, அந்நாட்டிற்கு எழுந்து வந்த அம் மூவரும், தாம்
பொழிந்த அருளினால், துன்பத்தை விளைவிக்க எழுந்து வரும் பாவத்தைத்
துடைத்து ஒழித்தனர்.

     'மூவர்கள்' - 'கள்' சாரியை.

                   பேய்களின் திண்டாட்டம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                     12
நீ ணெறி கடந்தங் குய்ப்ப நினைத்தவான் பயனை நல்கக்
கோணெறி முகத்து நாதன் கூர்ந்தருள் தளிர்த்த லுள்ளிச்
சேணெறி யிறங்கிக் காத்த தேவராய்த் தொழுத பேய்கள்
மாணெறி சிறந்த நாட்டின் வயின்றொறு மோட்டி னானே.
 
நீள் நெறி கடந்து, அங்கு உய்ப்ப நினைத்த வான் பயனை நல்க
கோள் நெறி முகத்து நாதன், கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி,
சேண் நெறி இறங்கிக் காத்த தேவராய்த் தொழுத பேய்கள்,
மாண் நெறி சிறந்த நாட்டின் வயின் தொறும் ஓட்டினானே.

     விண்மீன் போன்ற முகத்தைக் கொண்ட ஆண்டவன், தன் அருள்
மிகுதியாகத் தளிர்த்து வளர்தலைக்கருதி, நீண்ட வழியைக் கடந்து வந்து,
அவ்வெசித்து நாட்டில் செலுத்த நினைந்த சிறந்த பயனை அதற்கு வழங்கும்
பொருட்டு, வானுலகினின்று இறங்கி வந்து தம்மைக் காத்த தேவரென்று
கருதி அந்நாட்டார் தொழுது கொண்டிருந்த பேய்களை, பிற வகையால்
மாண்பு கொண்ட அறநெறியில் சிறந்து விளங்கிய அந்நாட்டின் இடந்
தோறுமிருந்து துரத்தினான்.