பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்463

 
"பொய்த் திறத்து அரசற்கு அஞ்சிப் போதல் போல், ஒளிப்ப எய்தி,
அத் திறத்து உணர்ந்த சூட்சி அருட் பயன் இதுவோ? இங்கண்
இத் திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ?" என்ன,
கைத் திறத்து அலர்த் தாள் நீவி, கண்ணின் நீர் ஆட்டினானே.


     "பொய்யான வல்லமையுள்ள ஏரோது மன்னனுக்கு அஞ்சி
நாட்டைவிட்டுப் போதல்போல் காட்டி, ஒளித்து இங்கு வந்தடைந்து,
அத்தன்மையாய் உணர்ந்து நீ செய்த உபாயத்தினால் விளைந்த அருளின்
பயன் இது தானோ? இவ்வுலகில் இத்தன்மையான அன்பின் மாட்சியை
அடையப் பெறுவோர் பிறர் உண்டோ?" என்று கூறி, தன் கைத் திறத்தால்
திருமகனின் மலர் போன்ற அடியைத் தடவி, தன் கண்ணீரால்
குளிப்பாட்டினான்.

                   17
சோலையி னிழல்வா யன்பு துளிர்த்தபூ முகத்தி னாதன்
மாலையின் றாமத் தங்கண் வயின்றொறு நிரைப்ப வீந்த
வேலையி னிறைந்த நன்றி விளைத்துநா டுலவிப் போன
காலையி னேரு மென்றோர் கடிநக ரண்மி னாரே.
 
சோலையின் நிழல் வாய் அன்பு துளிர்த்த பூ முகத்தின் நாதன்,
மாலையின் தாமத்து அங்கண் வயின் தொறும் நிரைப்ப ஈந்த
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து, நாடு உலவிப் போன
காலையின், ஏருமு என்ற ஓர் கடி நகர் அண்மினாரே.


     சோலையின் நிழல் போல் அன்பு துளிர்த்த மலர் போன்ற முகத்தைக்
கொண்ட ஆண்டவன், மாலையின் ஒழுங்குபோல் அங்கு இடந்தோறும்
வரிசையாகத் தந்து உதவிய தன்மையாய்க் கடலினும் மிகுதியான நன்மை
விளைவித்து, நாடெல்லாம் உலவிச் சென்று கொண்டிருந்த வேளையில்,
ஏருமு என்னும் பெயர் கொண்டு ஒரு மதிற்காவலுள்ள நகரத்தை
நெருங்கினர்.