18 |
மின்முகம்
புதைத்த கொண்மூ விரும்பிமே றவழ வானின்
னன்முகம் புதைத்த மீன்போ னறைமுகத் தலர்ந்த பைம்பூ
தன்முகம் புதைத்த பாலாற் றயங்குமோர் மரமே யங்கண்
பொன்முகம் புதைத்த வாயிற் புறத்தெழிற் பொலிந்த தன்றோ. |
|
மின் முகம் புதைத்த
கொண்மூ விரும்பி மேல் தவழ, வானின்
நல் முகம் புதைத்த மீன் போல், நறை முகத்து அலர்ந்த பைம் பூ
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே, அங்கண்,
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து, எழில் பொழிந்தது அன்றோ. |
மின்னலைத் தன்னுள்
புதைத்துள்ள கருமேகங்கள் விரும்பித் தன்
உச்சியில் தவழவும், வானத்தின் நல்ல முகத்தில் புதைந்து கிடந்த
விண்மீன்கள் போல் தேனைத் தம்முட் கொண்டு மலர்ந்த பசிய பூக்கள்
தன் முகத்தைப் புதைத்து மூடிய தன்மையாக விளங்கும் ஒரு மரம், அங்கு,
பொன்னால் தன் முகத்தைப் புதைத்தாற்போல் விளங்கிய வாயிலின்
பக்கமாக, அழகோடு பொலிந்து நின்றது.
'அன்றோ' அசைநிலை.
19 |
பேர்நல
மேன்மை யானும் பெயரறி யாமை யானு
மார்நல மரத்தின் சாயற் காங்குவே றிலாமை யானுங்
கூர்நலம் வியந்த பின்னர் கொழும்புகை காட்டி நன்னூற்
சீர்நல மொழிந்த வன்னார் தேவனென் றிறைஞ்சி னாரே. |
|
பேர் நல மேன்மையானும்,
பெயர் அறியாமையானும்
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும்.
கூர் நலம் வியந்த பின்னர், கொழும் புகை காட்டி, நல் நூல்
சீர் நலம் ஒழிந்த அன்னார், தேவன் என்று இறைஞ்சினாரே. |
அதன் பேரழகின்
மேன்மையாலும், பெயர் தெரியாமையாலும், நிறை
நலமுள்ள அம்மரத்தின் தோற்றத்திற்கு ஒப்பாக அங்கு வேறு மரம்
இல்லாமையாலும், நல்ல வேத நூலறிவால் வரும் சிறப்பு நலம்
பெறாதொழிந்த அந்நகர மாந்தர், சிறிது காலம் அதன் மிக்க நலம் பற்றி
வியப்புக் கொண்ட பின்னர், அதற்குக் கொழுமையான தூபமும் காட்டி,
ஒரு தேவனென்று அதனையும் வணங்கத் தொடங்கினர்.
|