பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்467

                   23
நடையொடு விளக்கி வான்மேல் ஞாயிறு நடப்ப தேபோல்
புடையொடு வானோர் மல்கப் போயிவர் திறந்த வன்பின்
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவில நீத்த மெங்குந்
தொடையோடு வளர்ந்த பாப்போற் றொடர்பறா வழங்கிற்
                                         றன்றோ.
 
நடையொடு விளக்கி வான் மேல் ஞாயிறு நடப்பதே போல்,
புடையொடு வானோர் மல்கப் போய் இவர், திறந்த அன்பின்
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு இல நீத்தம், எங்கும்,
தொடையொடு வளர்ந்த பா போல், தொடர்பு அறா வழங்கிற்று                                            அன்றோ.


     தான் நகர்ந்து செல்லும்போதே உலகத்தை விளக்கிய வண்ணம்
ஞாயிறு வானத்தில் நடப்பது போல, இம்மூவரும் தம் பக்கத்தே வானவர்
குழுமி வரச் சென்று, திறந்த அன்பின் மடை வழியாகப் பாய்ந்த
நன்மையாகிய அளவற்ற வெள்ளம், தொடை என்னும் உறுப்புத்தொடர்போடு
வளர்ந்த செய்யுளைப் போல, தொடர்பு அறாமல் அந்நாடெங்கும்
வழங்கிற்று.

     'அன்றோ' அசை நிலை.

               மூவரும் இரவிமாபுரத்துத் தங்குதல்

     - விளம், - விளம், - மா, கூவிளம்

                24
வான்முகத் துவந்தனம் வட்ட மிட்டபின்
றேன்முகத் தலர்த்தடஞ் சேர்ந்த பான்மையாற்
கான்முகத் தலர்ந்தநா டுலவிக் காசணி
நான்முகத் தொளிநடு நகர்சென் றாரரோ.
 
வான் முகத்து உவந்து அனம் வட்டம் இட்ட பின்,
தேன் முகத்து அலர்த் தடம் சேர்ந்த பான்மையால்,
கான் முகத்து அலர்ந்த நாடு உலவி, காசு அணி
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ.


     அன்னங்கள் மகிழ்ந்து எழுந்து வானத்தில் வட்டமிட்ட பின், தேனைக்
கொண்டுள்ள மலர்த் தடாகத்து இறங்கிச் சேர்ந்த தன்மைபோல்,
அம்மூவரும் மணம் கொண்டு பூக்கள் மலர்ந்த எசித்து நாட்டின் பல
பகுதிகளிலும் சுற்றிவந்த பின், மதிலிற் பதித்த மணிகளின் அழகு நான்கு
பக்கமும் ஒளிரும் நடுப் பகுதி நகரைச் சென்று சேர்ந்தனர்.