பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்468

     'அரோ' அசைநிலை. பின் வரும் பாடலுக்கும் இது கொள்க.

                25
தாமஞ்சூழ் மணிநிரைத் தரிக டாங்கணை
வாமஞ்சூழ் முடியணி மன்னன் வீற்றுறை
யேமஞ்சூ ழெயிற்பொலி யிரவி மாபுர
நாமஞ்சூ ழழகெழு நகர தாமரோ.
 
தாமம் சூழ் மணி நிரைத்து, அரிகள் தாங்கு அணை,
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமா புர
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ.


     ஒளி சூழ்ந்த மணிகளை வரிசையாகப் பதித்து, சிங்க உருவங்கள்
சுமந்து நிற்கும் இருக்கையின் மீது, அழகு பொருந்திய முடி அணிந்த
மன்னன் வீற்றிருப்பதும், பாதுகாப்பாகச் சூழ்ந்த மதிலோடு பொலிவதும்,
இரவிமாபுரம் என்னும் பெயரைக் கொண்டதுமாய், அழகு மேலோங்கிய
நகரம் அதுவாகும்.

               26
கார்செயுங் குழனலங் கவிழ்ந்த கோபுரத்
தேர்செயு முகமலர்ந் தெயிலின் தூசுமேற்
சீர்செயும் பயோதர ஞாஞ்சிற் சேர்த்தகழ்
நீர்செயு மேகலை யணிந்து நீர்த்ததே.
 
கார் செயும் குழல் நலம் கவிழ்ந்த கோபுரத்து
ஏர் செயும் முகம் மலர்ந்து, எயிலின் தூசு மேல்
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து, அகழ்
நீர் செயும் மேகலை அணிந்து நீர்த்ததே.


     அந்நகரம், தன் மீது கவிந்த கருமேகம் கூந்தலின் அழகைத் தந்து
நிற்கும் கோபுரமாகிய அழகு விளங்கும் முகம் மலர்ந்து, மதிலாகிய
ஆடையின் மேல் சிறப்பைத் தரும் கொங்கையாகிய பொம்மைகள்
சேர்க்கப்பெற்று, அகழியின் நீரால் அமையும் மேகலை அணிந்து சிறந்து
நின்றது.