பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்47

     "தான் நோக்கிய பார்வையே நோக்கிய திசைதோறும் தீய்க்கும்
படியாக தள்ளுதற்கரிய செருக்கோடு நோக்கி, புலி தன்னைத் தாக்கிய
தாக்கினால் சினந்து, தன் ஊக்கத்தையே தாக்கிய தன்மையாய் வெகுண்டு,
அதனைக் கொல்லும் ஆண் சிங்கம் போன்ற அம்மன்னன், தாம் நீக்கிய
நகரினின்று அகன்று போகும் யூதரைத் தாக்க நெருங்கியபோது, யாவரினும்
வலிமையில் வல்லவனாகிய ஆண்டவன், நெடிய மறைப்பை இரு படைக்கும்
இடையே ஆக்கிய திரைபோல, முழங்கிய கருமேகத்தை இடையில் நிறுத்தி
வைத்து அடைத்துக் கொண்டான்.

     சிங்கத்தைத் தாக்குவதற்குப் பொருந்தப் 'புலி' வருவித்து
உரைக்கப்பட்டது. மடங்கல்-மடங்கிய பிடரி மயிரை உடைய சிங்கத்திற்கு
ஆகுபெயர்.

                   46
இப்படை தொடரப் புணரிமுன் னெருங்க விடைவரும்
                             யூதருள் வெருவ
வப்படை கடலை மோயிசன் பிரம்பா லடித்தலிற்
                             பளிக்கொளிச் சுவர்க
ளொப்படை யலைகள் பிரிந்தகன் றிருபா
லுயர்ந்துநின்
                             றிடத்திவர் புக்கு
வெப்படை யரச னுளத்துடன் றுலம்ப
விருப்புட னியூதர்கள்
                             போனார்.
 
"இப் படை தொடர, புணரி முன் நெருங்க, இடை வரும் யூதர் உள்
                                    வெருவ,
அப்பு அடை கடலை மோயிசன் பிரம்பால் அடித்தலின், பளிங்கு
                                    ஒளிச் சுவர்கள்
ஒப்பு, அடை அலைகள் பிரிந்து அகன்று இருபால் உயர்ந்து நின்று,
                                    இடத்து இவர் புக்கு,
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப, விருப்புடன்
                                    யூதர்கள் போனார்.

     "இப்படை தமக்குப் பின்னால் தொடரவும், கடல் முன்னால்
நெருங்கவும், இடையில் வரும் யூதர்கள் உள்ளம் நடுங்கினர். அப்பொழுது,
நீர் நிறைந்த கடலை மோயிசன் பிரம்பால் அடித்தான். அடிக்கவே,
பளிங்கின் ஒளி வீசும் சுவர்களுக்கு ஒப்பாக, அடைந்து கிடந்த அலைகள்
இடையே பிரிந்து அகன்று இரு பக்கமும் உயர்ந்து நின்றன. இடைப்பட்ட
தரையிடத்து இவர்கள் புகுந்தனர். கொதிப்புக் கொண்ட அரசன் தன்
உள்ளத்தில் சினந்து முழங்கி நிற்க, யூதர்கள் விருப்புடன் நடந்து போயினர்.