பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்470

     இனி, 'உரை உயிர்ப்பு உறாது என' என்பதற்கு, 'உரையால்
வெளிப்படுத்துதல் தமக்கு இயலாதெனக் கண்டு' என உரைக்கினும்
அமையும்.


             29
நீரகம் பொதிர்மணி நிறத்த காரெனப்
பாரகங் குளிர்ப்பவான் பயன்பெய் தேகியன்
பாரகந் துகைத்திவர் நடந்தெல் லைம்பதா
யேரகங் கிளர்பதி தங்கவேகினார்.
 
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என,
பார் அகம் குளிர்ப்ப வான் பயன் பெய்து ஏகி, அன்பு
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து, எல் ஐம்பது ஆய்,
ஏர் அகம் கிளர் பதி தங்க ஏகினார்.


     நீரைத் தன்னகத்து நிறையக் கொண்டுள்ள நீல மணி போன்ற
நிறமுள்ள கருமேகம் போல், தாம் சென்ற நிலப்பகுதிகளெல்லாம்
குளிருமாறு வானுலக நன்மைகளைப் பொழிந்த வண்ணமாய்ப்போய், அன்பு
நிறைந்த தம் உள்ளம் வருந்தும்படி இம்மூவரும் நடந்து, ஐம்பது நாட்கள்
கடந்த பின்னர், அழகைத் தன்னகத்து மிகுதியாகக் கொண்டுள்ள
அந்நகரத்தில் தங்கச் சென்றனர்.

             30
சீர்வள ரறந்தவந் தியாக மற்றநன்
னீர்வளர் மறையுடை புக்கு நீணகர்
வார்வளர் முரசொலி வழங்கப் புக்கன
ரேர்வளர் முகத்தினு மிலங்கு மாண்பினோர்.
 
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல்
நீர் வளர் மறை புடை புக்கு, நீள் நகர்
வார் வளர் முரசு ஒலி வழங்கப் புக்கனர்,
ஏர் வளர் முகத்தினும் இலங்கு மாண்பினோர்.


     அழகு வளரும் தம் முகத்தைக் காட்டிலும் அகம் சிறந்து விளங்கும்
மாண்பு கொண்ட அம்மூவரும், சிறப்பு வளர்வதற்குக் காரணமான
அறவொழுக்கமும் தவமும் தியாகமும் மற்ற நல்லியல்புகளும் வளர்க்கும்
வேதத்தைத் தம்மோடு உடன் வந்து புகக் கொண்டு, நெடிய அந்நகரில்